வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்கும் திட்டத்திற்கு ஜே.வி.பி எதிர்ப்பு
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புகூறலுக்காக ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை நடைமுறைப்படுத்தும் வகையில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்கும் திட்டத்திற்கு மக்கள் விடுதலை முன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டின் போது தாம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக முன்னணியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி செயலகத்தில் இரண்டாவது தடவையாக நேற்றைய தினம் கூடியது.
இதன்போது, அரசாங்கம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரசியலமைப்பை பாதுகாக்கும் வகையில் செயற்படும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி, அரசியலமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எதனையும் செய்யப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த சர்வகட்சி மாநாடு பலனளித்துள்ளதாக ஜனநாயக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.சர்வதேச அழுத்தங்களிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கான சந்தர்ப்பம் இதனூடாக ஏற்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.