Breaking News

கிளிநொச்சியில் இன்றும் மழை : மக்கள் இடப்பெயர்வு



கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக 6733 குடும்பங்களைச் சேர்ந்த 22990 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளிவிபரம் குறிப்பிடுகின்றது.

அதனடிப்படையில் 1547 குடும்பங்களை சேர்ந்த 5070 பேர் உறவினர் வீடுகளிலும், 256 குடும்பங்களைச் சேர்ந்த 882 பேர் 8 தற்காலிக முகாம்களிலும் தங்கியுள்ளதாக அப் புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

இதேவேளை 38 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், 1026 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் இருவர் காயமடைந்நுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாவட்டத்தில் இன்றும் மழை பெய்துவருவதால், தாழ் நிலங்கள் தொடர்ந்தும் வெள்ளத்தினால் நிறைந்து காணப்படுவதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இரணைமடு குளத்திற்கு தொடர்ந்தும் நீர் வருகை காணப்படும் நிலையில், குளத்தின் புனரமைப்பு பணிகளும் இடம்பெற்று வருவதால், 26 அடி வரை மாத்திரமே நீரை தேக்க முடியும். இதனால், தொடர்ந்தும் 11 கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளன. அத்துடன் கனகாம்பிகை குளம் உட்பட சில சிறு குளங்களும் தொடர்ந்தும் வான் பாய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.