விஜயதாஸவின் குற்றச்சாட்டை நிராகரிக்கிறார் ராஜித
தரம் குறைந்த மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்ததனால் நீதிமன்றில் தண்டனை விதிக்கப்பட்டதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சுமத்திய குற்றச்சாட்டு அடிப்படையற்றது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
புளத்சிங்கள பெல்லகொட பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர், நீதி அமைச்சருக்கும் தமக்கும் இடையில் எவ்வித தனிப்பட்ட முரண்பாடுகளும் கிடையாது என்றும் அனாலும் அவர் தன்மீது இவ்வாறு குற்றம் சுமத்துவதாகவும் கூறியிருந்தார்.
அத்துடன், அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் தாமும் நீதி அமைச்சரும் சுமூகமாக பேசிக் கொண்டதாகவும், அவன்ட் கார்ட் சம்பவம் தொடர்பில் அமைச்சரவையில் தாம் கருத்து வெளியிட்ட போது அமைதி பேணிய நீதி அமைச்சர் பின்னர் ஊடகங்களில் அது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளதாகவும் கூறினார்.
தமக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் பிழையான தகவல்களை அமைச்சர் விஜயதாஸ குறிப்பிட்டுள்ளதாகவும் இந்த வழக்கின் அரச தரப்பு சட்டத்தரணியாக விஜயதாஸ ராஜபக்ஷ கடமையாற்றியிருந்தார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாம் அவன்ட் கார்ட் நிறுவனத்தின் கட்சி ஆதரவாளர்களுக்கு வேலை வாய்ப்பு கோரி கடிதம் அனுப்பி வைத்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலும் உண்மையில்லை எனவும், இவ்வாறு தொழில் வாய்ப்பு கோரி விஜயதாஸ ராஜபக்ஷ அனுப்பிய கடிதங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.