ஜனவரியில் அரசாங்கத்தை கவிழ்ப்போம் - மஹிந்த அணி சூளுரை
சர்வதேச விசாரணைக்கு இணக்கப்பாடு தெரிவிக்கும் அமெரிக்காவின் உடன்படிக்கைக்கு இலங்கை அரசாங்கம் கையெழுத்திட்டு எமது நாட்டையும் படையினரையும் காட்டிக்கொடுத்துள்ளது எனக் குற்றம்சாட்டும் மஹிந்த அணி சார்பு கூட்டு எதிர் கட்சியினர்“பொறுத்தது போதும்” எதிர்வரும் ஜனவரியில் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் எமது மக்கள் போராட்டத்தை ஆரம்பிப்போம் என்றும் சபதமிட்டனர்.
கொழும்பு பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற “மஹிந்த அணி சார்பு கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான தினேஷ் குணவர்த்தன.
இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகத்தின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட அரசு அமெரிக்காவின் இலங்கை தொடர்பான பிரேரணையை தாமே முன்வைத்துஏற்றுக்கொண்டது.அதேவேளை சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னத்தில் இலங்கை தொடர்பாக விசாரிப்பதற்கான சர்வதேச நீதிமன்றத்தையும் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
அது தொடர்பில் அமெரிக்கா தயாரித்துள்ள இணக்கப்பாட்டு உடன்படிக்கையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் பயங்கரவாதத்தை ஒழித்த எமது படையினரும் நாடும் சர்வதேசத்திற்கு காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
எமது படையினர் பெற்ற வெற்றி பின்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. இன்று அரசின் இந்தக் காட்டிக் கொடுப்பு தொடர்பாக அரசுக்கு ஆதரவு வழங்கும் ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியினரிடையே எதிர்ப்பு தலைதூக்கியுள்ளது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நல்லாட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்க ஆரம்பித்து விட்டார். நாட்டின் அரசியலமைப்பையும் சட்டத்துறையையும் மீறி ஜெனிவா பிரேரணைக்கமைய சர்வதேச விசாரணை நடைபெறவுள்ளது.
இன்று அரசுக்கு ஆதரவு வழங்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாட்டின் சட்டத்தை தனது கையில் எடுத்து நீதித்துறைக்கு சவால் விடுக்கின்றது. சட்டத்தை மீறி விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஹர்த்தால் நடத்துகின்றது.
நாட்டில் சட்டம், நீதித்துறை அனைத்தும் சீர் குலைந்து சின்னாபின்னமாகியுள்ளன. எனவே இன்று நாட்டுக்குள் பயங்கரமான தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான நிலை தலைதூக்கியுள்ளது என்றார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச எம்.பி. குறிப்பிடுகையில்
நாட்டை காட்டிக்கொடுக்கும், படையினரை பழிவாங்கும் அரசின் நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டு தொடர்ந்தும் மௌனமாக இருக்க முடியாது. எனவே அரசைக் கவிழ்க்கும் எமது போராட்டத்தை ஜனவரியில் ஆரம்பிப்போம்.இது “ஹைபிறிட்” அரசாங்கம் பசுமாட்டையும் காளை மாட்டையும் இணைத்து விவசாய நிலத்தை உழுவது போன்று இன்று அரசு நிலை தடுமாறி செயற்படுகிறது.
அரசாங்கத்தில் அமைச்சர்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து ஒருவருக்கொருவர் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து குடும்பிப்பிடிச் சண்டை நடத்துகின்றனர். 10 வருடங்கள் கழிந்த அரசுக்குள் தான் இவ்வாறான முரண்பாடுகள் தலைதூக்கும். ஆனால் இந்த அரசு ஆட்சிக்கு வந்து 10 மாதங்களுக்குள் குடும்பிப்பிடிச் சண்டை ஏற்பட ஆரம்பித்துள்ளது.
எனவே இந்த அரசின் ஆயுட் காலம் வர வர குறைந்து கொண்டே செல்கிறது என்றார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் எம்.பி க்களான உதய கம்மன் பில மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோரும் கலந்து கொண்டனர்.