முதலமைச்சரின் சாட்டையடியும் கூட்டமைப்பின் நிலைப்பாடும் – சிறீதரன்!
தமிழ் மக்களுடைய அதிமுக்கிய அரசியல் தலைமையாக
விளங்குகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைமையின் தகுதி, அதன் எதிர்காலச் செயற்பாடுகள் என்பன குறித்து இப்போது பலரையும் ஆழமாகச் சிந்திக்கத் தூண்டியிருக்கின்றது. இரண்டு காரணங்களினால் இந்த சிந்தனைத் தூண்டல் ஏற்பட்டிருக்கின்றது.
பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி இரண்டு கட்டங்களாக தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளுக்குள்ளே நடத்திய உறுதிமிக்க உண்ணாவிரதப் போராட்டம் அந்தக் காரணங்களில் ஒன்றாகும். பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனை, கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என தான் கட்சித் தலைமையிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகக் கூறி அதற்கு ஆதாரமாகச் சுமத்தியிருந்த குற்றச்சாட்டுக்களுக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அளித்துள்ள நீண்ட விளக்கம் இரண்டாவது காரணமாகும்.
தமது விடுதலைக்காகத் தொடர்ச்சியாக தாங்களே குரல் கொடுத்து நெருக்கடி மிகுந்த சிறைச்சாலை சூழலில் பல போராட்டங்களை நடத்தி வந்த தமிழ் அரசியல் கைதிகள் இறுதியாக எடுத்த தீர்மானம் மிக்க உண்ணாவிரதப் போராட்டமும், அதனையடுத்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசாங்கம் அளித்துள்ள உறுதிமொழியும் இன்று அரசியல் ரீதியாகப் மிகப் பெறுமதியான நிகழ்வாகப் பதிவாகியிருக்கின்றது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ் அரசியல் கட்சிகளும், அதேபோன்று தென்னிலங்கையில் உள்ள முற்போக்கு சிந்தனை கொண்ட இடதுசாரி அரசியல் கட்சிகளும் போராடி வந்திருக்கின்றன. தொடர்ச்சியாக அவர்களின் விடுதலைக்காக அவைகள் குரல் எழுப்பி வந்திருக்கின்றன. அதேபோன்று மனித உரிமை அமைப்புக்கள், பொது அமைப்புக்கள் என பலதரப்பட்ட அமைப்புக்களும் இன, மத, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் நியாயத் தன்மையை உணர்ந்து அதற்காகச் செயற்பட்டிருக்கின்றன.
ஆனால் நல்லாட்சியையும் ஜனநாயகத்தையும் உருவாக்கப் போவதாக உறுதியளித்து அரியணை ஏறியுள்ள புதிய அரசாங்கத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையானது வெறும் கோரிக்கையாகவே இருந்து வந்தது. சிறைச்சாலைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளே அந்தக் கோரிக்கைக்குச் செயல் வடிவம் கொடுத்து, சீரான முறையில் ஒரு போராட்டத்தைத் தொடங்கியிருந்தார்கள்.
இந்தப் போராட்டமானது வழமையான ஒரு நிகழ்வாகவே பலராலும் நோக்கப்பட்டது. தமிழ் அரசியல் கைதிகள் இப்படித்தான் போராட்டம் நடத்துவார்கள், யாராவது அமைச்சர்களோ பாராளுமன்ற உறுப்பினர்களோ அல்லது மதத்தலைவர்களோ சென்று அவர்களின் விடுதலைக்கு உறுதியளித்து போராட்டத்தைக் கைவிடுமாறு கோரினால் போராட்டத்தைக் கைவிட்டு அமைதியாகிவிடுவார்கள் என்ற பொதுவான எண்ணம் பலரிடமும் காணப்பட்டது.
ஆனால், அவர்கள் இம்முறை மிகவும் உறுதியாகத் தமது விடுதலைக்கான இறுதி முடிவை நோக்கிய வகையில் தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள், பல்வேறு அரச மற்றும் இராஜதந்திரச் சந்திப்புக்கள், கலந்துரையாடல்களின் போது தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை மிக முக்கியமான ஒரு பிரச்சினையாகக் கருத்திற்கொண்டு அதற்கான கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்கள்.
அந்தப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என கோரியிருந்தார்கள். இருந்தாலும், அந்தக் கோரிக்கைகள், வலியுறுத்தல்கள் என்பன வழக்கம்போல பத்தோடு பதினொன்றாகவே பிரச்சினையைத் தீர்க்கவல்லவர்கள் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான அழுத்தத்தைக் கொடுப்பவர்களினால் நோக்கப்பட்டது. இதன் காரணமாக பிரச்சினைகள் குவிக்கப்பட்டிருந்த பெட்டகத்தில் மேல் எழாத வகையில் அவற்றில் ஒன்றாகவே அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் இருந்தது.
ஆனால், தமிழ் அரசியல் கைதிகள், தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பலதரப்பட்ட பிரச்சினைகளுக்குள் தமது விடுதலை குறித்த விடயம் முன்னுரிமை பெறத்தக்க வகையில் தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள். இதன் காரணமாகவே, அவர்கள் முதலில் கோரியிருந்தவாறு, ஒரு கால எல்லையைக் குறித்து, பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்ற உத்தரவாதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து பெறக் கூடியதாக இருந்தது.
கடந்த மாதம் 12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட முதற்கட்ட உண்ணாவிரதப் போராட்டம் 6 ஆவது நாளுடன் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. ஆயினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்த நவம்பர் 7 ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதியில் உறுதியளித்தபடி, கைதிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கைதிகளில் ஒரு தொகுதியினர் நவம்பர் 8 ஆம் திகதி பிணையில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அளித்திருந்த உத்தரவாதமும்கூட உறுதியான முறையில் நிறைவேற்றப்படவில்லை.
குளறுபடிகளுக்குள்ளாக நேர்ந்திருந்தது. இந்தச் சூழலிலேயே தமிழ் அரசியல் கைதிகள் தமது இரண்டாம் கட்டப் போராட்டத்தை நவம்பர் 8 ஆம் திகதி ஆரம்பித்திருந்தார்கள்.
ஒன்பது நாட்கள் தொடர்ந்த அந்த உண்ணாவிரதப் போராட்டம், தமிழ் அரசியல் கைதிகள் கட்டம் கட்டமாகப் பிணையில் செல்லவும், அதேபோன்று ஒரு வருட புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னரும் கட்டம் கட்டமாக விடுதலை பெற்றுச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அரசாங்கத்தின் உத்தரவாதத்தை ஏற்று தமது போராட்டத்தைக் கைவிட்டிருக்கின்றார்கள்.
தமிழ் அரசியல் கைதிகள் உறுதியான முறையில் தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்த அதேவேளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் அவர்களின் விடுதலைக்கான அழுத்தத்தை சரியான முறையில் அரசாங்கத்திற்குக் கொடுக்கவில்லை என்ற அதிருப்தி வெளியிடப்பட்டிருக்கின்றது.
நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களான தமிழ் அரசியல் கைதிகள் அரசியல் வாதிகள் நடத்துகின்ற சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தைப் போலல்லாமல், இறுதி முடிவைக் காணாமல் ஓய்வதில்லை என்ற உறுதியோடு அவர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள்.
கைதிகளின் முதற்கட்ட போராட்டத்தின்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், ஜனாதிபதியை நேரடியாகச் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தி அல்லது அவருக்கு அழுத்தத்தைக் கொடுத்து பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் ஓர் உறுதிமொழியைப் பெற முடியாமல் போயிருந்தது. ஆயினும், அவர் தொலைபேசி வழியாகவே ஜனாதிபதியுடன் பேசியிருந்தார். அப்போது நவம்பர் 7 ஆம் திகதிக்கிடையில் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்ற உத்தரவாதத்தை அவர் வழங்கியிருந்தார்.
ஆயினும் கைதிகளை தொகுதி தொகுதியாக பிணையில் விடுதலை செய்வது என்றும், வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் மற்றும் தண்டனை பெற்ற கைதிகளின் விடயம் குறித்து, அமைச்சரவை பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குழுவினால் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்குக் கைதிகள் உடன்படவில்லை. உறுதியளித்தவாறு நவம்பர் 7 ஆம் திகதிக்குள் எந்தவொரு நடவடிக்கையும் அரசாங்கத்தினால் எடுக்கப்படவுமில்லை. இதன் காரணமாகவே அவர்கள் இரண்டாம் கட்ட போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள்.
அரசாங்கத்தின் முதலாவது உறுதிமொழி நிறைவேற்றப்படாவிட்டால், தாங்கள் தமது போராட்டத்தை நவம்பர் 8 ஆம் திகதி மீண்டும் தொடரப்போவதாக கைதிகள் அறிவித்திருந்தனர். அந்த அறிவித்தலை அவர்கள் வெளியிட்டபோது, அரசாங்கத்தின் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கின்றது. எனவே, நீங்கள் உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள். அவ்வாறு அரசாங்கம் தனது உறுதிமொழியை நிறைவேற்றாவிட்டால், நாங்களும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் உங்களுடைய உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்து கொள்வோம் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கைதிகளிடம் நேரடியாகத் தெரிவித்திருந்தார்.
ஆனால், பலரும் எதிர்பார்த்த வண்ணம் அரசாங்கம் தனது உறுதி மொழியை நவம்பர் 7 ஆம் திகதிக்கிடையில் நிறைவேற்றவில்லை. கைதிகள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியிருந்தார்கள். ஆனால், அவர்களுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்தப் போராட்டத்தில் இணையவில்லை. போராடப் போவதாக உறுதியளித்திருந்த சம்பந்தனும் நாட்டில் இல்லை. அவருடன் அப்போது உடன் இருந்தவர்களில் ஒருவராகிய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் நாட்டில் இல்லை.
ஆனாலும் வெளியில் வடமாகாண முதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உட்பட பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் கைதிகளின் விடுதலைக்காகக் குரல் கொடுத்திருந்தனர். வடக்கு கிழக்கு மாகாணங்கள் தழுவிய பொது கடையடைப்பு நடவடிக்கையும் கவனயீர்ப்புச் செயற்பாடாக இடம்பெற்றிருந்தது.
இதற்கிடையில் வடமாகாண முதலமைச்சர் தமது அமைச்சர்களுடன், ஜனாதிபதியைச் சந்தித்தபோது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அழுத்தமாக எடுத்துக் கூறி அவர்கள் விடுதலை செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.
இரண்டொரு தினங்களில் இதுகுறித்து தீர்க்கமான முடிவெடுக்கப்படும் என்று ஜனாதிபதி வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனிடம் உறுதியளித்திருந்தார். அதற்கமைவாக, நவம்பர் 16 ஆம் திகதி திங்கட்கிழமை அரசாங்கம் தான் கைதிகள் விடயத்தில் என்ன செய்யப் போகின்றது என்பது குறித்து வெளிப்படையாகத் தெரிவித்திருந்தது. அதனை ஓர் உறுதிமொழியாகவே வழங்கியிருந்தது.
இதனையடுத்தே, தமிழ் அரசியல் கைதிகள் தமது போராட்டத்தைக் கைவிட்டிருக்கின்றார்கள்.
உண்மையில் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தரப்பில் ஓர் ஒன்றிணைந்த செயற்பாட்டைக் காணவில்லை. ஒரு முகப்படுத்தப்பட்டதாக அந்த விடயத்தைக் கையாள்வதற்குரிய நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. கைதிகளின் விடயத்தில் இறுதி முடிவு என்ன என்பதை அறிவிக்கப் போவதாகக் குறிப்பிட்டிருந்த நவம்பர் மாதம் 16 ஆம் திகதி திங்கட்கிழமைக்கு முதல் நாளாகிய நவம்பர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உயர் மட்ட முக்கியஸ்தர்கள் ஒன்றிணைந்து கைதிகள் விடயம் குறித்து ஆராய்ந்திருந்தார்கள்.
தொடர்ச்சியான உண்ணாவிரதம் காரணமாக, தமிழ் அரசியல் கைதிகளின் உடல் நிலைமோசமாகி, சிறைச்சாலைகளுக்குள் ஒரு பதற்றமான சூழல் உருவாகியிருந்த நிலையிலும், அந்த விடயம் குறித்து ஆராய்வதற்கான விசேட கூட்டமாக அது அழைக்கப்படவில்லை. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இணைப்புக்குழு கூட்டம் கடைசியாகக் கொழும்பில் நடைபெற்றபோது, கூட்டமைப்பை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்வது குறித்து பேசுவதற்காக வவுனியாவில் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்திலேயே கைதிகள் விவகாரம் மட்டும் பேசப்பட்டிருந்தது.
ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டிராவிட்டால், அந்தக் கூட்டம் - சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் நடைபெற்றிருக்குமா என்பதே சந்தேகமாக இருக்கின்றது.
சரியான வழிநடத்தலற்ற நிலையில், ஒரு முகப்படுத்தப்பட்ட செயலாற்றல் நடைமுறை இல்லாத வகையிலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. இது தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் மிகத் துலாம்பரமாக வெளிப்பட்டிருக்கின்றது.
பிணையில்தான் அனுமதிக்க முடியும். வேண்டுமானால் தண்டனை பெற்ற கைதிகளை புனர்வாழ்வுப் பயிற்சியளித்து விடுதலை செய்யலாம் என்று அரசாங்கம் தானாகக் கூறியதேயல்லாமல், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தரப்பில் இருந்து கைதிகளின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகள் எதுவும் முன்வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அவ்வாறு ஏதேனும் யோசனைகள் முன்வைக்கப்பட்டு, அவைகள் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரியவில்லை.
தமிழ் அரசியல் கைதிகளின் தொடர்ச்சியான போராட்டமும், போராட்டத்தில் அவர்கள் காட்டியிருந்த உறுதியுமே அரசாங்கத்தை பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்ற நிலைமைக்குத் தள்ளியிருந்தது. வெளியில் இருந்து நடத்தப்பட்ட போராட்டங்களும், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் நடத்திய கடையடைப்பு போராட்டமும் அரசாங்கத்திற்கு மேலும் அழுத்தத்தைக் கொடுத்திருந்தன.
கூட்டமைப்பின் தலைவர்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் ஒன்றிணைந்து இந்த விடயம் குறித்து தங்களுக்குள் கூடிப் பேசியிருக்க வேண்டும்.
அதற்கு என்ன வகையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது பற்றி ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். அத்தகையதொரு சந்திப்பின் பின்னர், அரசாங்கத் தரப்பினருக்கு நெருக்குதல் கொடுக்கும் வகையில் அவர்களுடன் பல மட்டங்களில் அதிகாரிகள், அமைச்சர்கள், சட்டமா அதிபர் திணைக்களம் என்ற பல தரப்புக்களுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
அழுத்தங்களைப் பிரயோகித்திருக்க வேண்டும். பிரதமரையும், ஜனாதிபதியையும் நேரடியாகச் சந்திப்பதற்கான முயற்சிகளை இடைவிடாமல் முன்னெடுத்திருக்க வேண்டும்.
அவர்கள் நினைத்த நேரம் தமிழ்த்தலைவர்களைச் சந்திப்பதற்கான நிகழ்வுகள் இடம்பெற்றிருப்பதற்குப் பதிலாக அழுத்தங்கள் காரணமாக அவர்கள் தமிழ்த்தலைவர்களைச் சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கி சந்தித்திருக்க வேண்டும். அரசாங்கம் அளித்த உறுதிமொழியை அப்படியே கைதிகளிடம் சென்று நேரடியாகத் தெரிவித்த வகையிலான நடவடிக்கையே இப்போது இடம்பெற்றிருக்கின்றது.
இந்த நடவடிக்கைகளுக்குள்ளேயும், வடமாகாண முதலமைச்சர் ஜனாதிபதியுடன் மேற்கொண்டிருந்த தொடர்புகள், நேரடிச் சந்திப்பு என்பனவும் தாக்கத்தை ஏற்படுத்தத் தக்க வகையில் இடம்பெற்றிருப்பதைக் காணமுடிகின்றது.
இரண்டாவது விடயமாகிய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வடமாகாண முதலமைச்சர் மீது சுமத்தியிருந்த குற்றச்சாட்டுக்கள் மற்றும் அவரை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கட்சித் தலைமையிடம் விடுத்திருந்த கோரிக்கை குறித்து மிகவும் தெளிவாக முதலமைச்சர் விக்கினேஸ்வரன் நீண்டதொரு பதிலை அளித்திருக்கின்றார்.
அவருடைய பதிலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைமையின் செயற்பாடுகளில் காணப்படுகின்ற ஒரு தலைமைக்குரிய தன்மைகள் இல்லாதிருப்பது சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பே ஓய்வு பெற்ற நீதியரசராகிய விக்கினேஸ்வரனை வடமாகாணத்தின் முதலமைச்சராக்கியது. அதனைத் தனியே தமிழரசுக் கட்சி மாத்திரம் செய்யவில்லை. அவரை அணுகி அரசியலுக்குள் அவரைப் பிரவேசிக்கச் செய்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை அந்தக் கட்சி செய்திருக்கலாம்.
ஆயினும் கூட்டமைப்பின் அனைத்துக் கட்சிகளுமே இணைந்துதான் அவரை வேட்பாளராக நிறுத்தியிருந்தன. தேர்தலில் அவர் வெற்றி பெறுவதற்காகச் செயற்பட்டிருந்தன. எனவே அவரைப் பொறுத்தமட்டில், கூட்டமைப்பிற்குக் கூட்டுப் பொறுப்பிருக்கின்றது. அந்தக் கூட்டுப் பொறுப்பின் வழியிலேயே அவர் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அவருடனான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
குறுகிய அரசியல் இலாபங்க ளுக்காக அல்லது ஒரு கட்சியின் செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்காகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பொறுப்பு மிக்க செயற்பாடுகளைப் பலிக்கடாக்களாக்கக் கூடாது.
அது கூட்டமைப்பையே மலை போல நம்பியிருக்கின்ற தமிழ் மக்களை வெறுப்புக்கும் விரக்திக்கும் ஆளாகச் செய்துவிடும்.
கூட்டமைப்பின் தலைமை, தமிழரசுக் கட்சியின் தலைமைகள் முக்கியமாக எந்தெந்த வகைகளில் ஒரு அரசியல் தலைமைக்குரிய பண்புகளை இழந்த நிலையில் செயற்பட்டிருக்கின்றன என்பதை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தமது பதிலில் அடிக்கோடிட்டு எடுத்துக் காட்டத்தக்க வகையில் வெளிப்படுத்தியிருக்கின்றார்.
கூட்டமைப்பை ஒரு கட்டுக் கோப்பான கட்சியாக அமைப்பாகச் செயற் படுத்துவதற்கு இயலாமல் இருப்பது அல்லது வேண்டு மென்றே அதற்காகச் செயற்படாதிருப்பது போன்ற விடயங்கள் குறித்து பல அரசியல் கட்டுரையா ளர்களும் விமர்சகர்களும், ஆய்வாளர்களும் பக்கம் பக்கமாக எழுதிக் குவித்திருக் கின்றார்கள். ஆனால் உரியவர்களின் கவனத்தை ஈர்க்கவும், சரியான முறையில் அவர்களைச் செயற்படச் செய்யவும் அந்த எழுத் துக்களினால் இதுவரையில் இயலாமல் போயிருக்கின்றது.
இப்போது கூட்டமைப்புக்கு உள்ளே இருந்து உறுதியான ஒரு குரலாக, சாட்டையால் அடித்தது போன்ற வகையில் தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளின் செயற்பாடுகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றது. முதலமைச்சர் விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ள விடயங்களை கவனத்திற்கொண்டு இனிமேலாவது தமிழரசுக் கட்சியும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் அரசியல் தலைமைகளுக்கு இன்றைய அரசியல் சூழலில் இருக்க வேண்டிய கட்டுக்கோப்பு தலைமைத்துவ நிலைமை, தலைமைத்துவச் செயற்பாடு என்பவற்றுடன் இயங்குமா, இயங்க முன்வருவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.