துறைசார் வல்லுனர் குழுக்களை அமைக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு
ஜெனிவா தீர்மானத்துக்கு அமைய, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான பொறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக, கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக துறைசார் வல்லுனர்களைக் கொண்ட குழுக்களை அமைக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, ஆராய்வதற்காக நேற்றுமாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடந்த இரண்டாவது அனைத்துக் கட்சிக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை 5 மணியளவில் நடந்த இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், ரெலோவின் பிரதிநிதிகள் எவரும் பங்கேற்கவில்லை.அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தில் அரசாங்கத்தின் மெத்தனப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ரெலோ புறக்கணித்திருந்தது.
இந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்டே நடைமுறைப்படுத்தப்படும்.
நாட்டின் கௌரவம் பாதுகாக்கப்படும் வகையில் ஐ.நா. பரிந்துரைகள் தொடர்பிலான தீர்மானங்கள் எடுக்கப்படும்.” என்று தெரிவித்தார்.இந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட,சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், டியூ.குணசேகர,“ அனைத்து கட்சிகளினாலும் ஏற்றுக்கொள்ள கூடிய விடயங்களை உடனடியாக அமைச்சரவையில் சமர்ப்பித்து நிறைவேற்றவேண்டும். அதேபோன்று தீர்மானங்கள் எடுப்பதற்கு முடியாதுள்ள பிரச்சினைகளை இனிவரும் கூட்டத்தொடரில் ஆராய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர், தினேஷ் குணவர்தன, கருதது வெளியிட்ட போது, “ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்ட பின்னர் இது குறித்து பேச்சு நடத்தக் கூடாது. கலப்பு நீதிமன்றம் என்பது இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணானது. ஜெனிவா தீர்மானத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத பல்வேறு பரிந்துரைகள் காணப்படுகின்றன ” என்று குறிப்பிட்டார்.
ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, “முன்னைய அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டதாக இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் யோசனைகள் அமைய கூடாது. பக்கசார்பற்ற முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும். இராணுவத்தினருக்கு பங்கம் ஏற்படும் வகையில் செயற்படக் கூடாது” எனத் தெரிவித்தார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர், மனோ கணேசன், “ஜெனீவா தீர்மானம் குறித்து கவனம் செலுத்தும் ஆர்வம் இனரீதியான பிரச்சினைகளை தீர்ப்பதில் இருக்க வேண்டும். தனி நாட்டை உருவாக்குவதற்கு தேவை எவருக்கும் இல்லை. இலங்கை என்பது பல்லினத்தவர்கள் வாழும் நாடு என்பதனை புரிந்து கொண்டு செயற்படவேண்டும்” என்று கூறினார்.
தமிழரசு கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளர் எம்.ஏ சுமந்திரன், ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் முன்மொழியப்பட்ட பரிந்துரைகள் அனைத்தும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.
ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் , ஜெனிவா தீர்மானம் மேலும் வலுப்பெற்றிருக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. இருப்பினும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றார்.
அதையடுத்து கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஜெனிவாவில் முன்வைக்கப்பட்ட அனைத்து பரிந்துரைகளையும் அலசி ஆராய்ந்து பார்த்த பின்னரே இது குறித்தான தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும். ஜெனிவா தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய 20 விடயங்கள் தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எட்டுவதற்கு அனைத்து தரப்பினரும் யதார்த்த ரீதியான கருத்துக்களையும் முன்வைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், உள்ளக பொறிமுறையின் ஊடாக பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் தொடர்பாக மக்களை உரியவாறு தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.
புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்களின் இதய உணர்வுகளை நன்கு புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். மேலும் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் மீது தமிழ் மக்கள் முழுமையான நம்பிக்கை வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
அதேவேளை, கடந்த கூட்டத்தில் ஐ.நா தீர்மானம் தொடர்பான எழுத்து மூல ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த கோரிக்கைக்கு அமைய 12 கட்சிகள் தமது எழுத்துமூல ஆலோசனைகளை சமர்ப்பித்திருந்தன.
இந்த எழுத்துமூல ஆலோசனைகளை அரசியல் கட்சிகளுக்கிடையில் பகிர்ந்து கொள்வதற்கு நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.