ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு முடிவு - அமைச்சரவைப் பத்திரம் இன்று சமர்ப்பிக்கப்படும்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முழுமையாக நீக்கவும், புதிய தேர்தல் முறைமையை அமுல்படுத்தவும் நாம் திட்டமிட்டுள்ளோம். இதன்படி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான விசேட அமைச்சரவை பத்திரத்தை இன்று கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தொடரின் போது சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
புதிய அரசாங்கம் பல வருடங்கள் ஆட்சிபுரிய வில்லை. பத்து மாதகால பூர்த்தியில் இதுவரைக்கும் எந்தவொரு அரசாங்கத்தினாலும் நிறைவேற்ற முடியாத பல்வேறு வேலைத்திட்டங்களை நாம் அமுல்படுத்தியுள்ளோம். ஆகவே எமது அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் என்றும் அவர் கோரினார்.
புலம்பெயர்ந்த இலங்கையர்கள் 2000 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. .இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான எஸ்.பி நாவின்ன, மங்கள சமரவீர மற்றும் டி.எம் சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு மேலும் உரையாற்றுகையில்,
இலங்கை என்பது அபிவிருத்தி அடைந்து வரும் நாடாகும். நாட்டின் வளர்ச்சிக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். இதனை மையமாக வைத்தே இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வருகை தந்தவுடன் இதற்கான வேலைத்திட்டத்தை துரிதமாக முன்னெடுத்து வருகின்றது.
இரட்டை பிரஜாவுரிமை என்ற விடயத்துக்கு மிகவும் நீண்டகால வரலாறு உள்ளது. பிரிதொரு நாட்டில் வர்த்தக ரீதியாகவும் முதலீடு ரீதியான தொடர்புகளை மேம்ப்படுத்தும் நோக்கிலும் இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படுகின்றது. யுத்தக்காலத்தின் போது இலங்கையர்கள் பலர் நாட்டிலிருந்து வெளியேறி பல நாடுகளில் தஞ்சம் புகுந்து வாழ்க்கையை கொண்டு சென்றனர்.
இருந்தபோதிலும் தற்போது நாட்டில் சுதந்திரம், ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதனூடாக இலங்கையில் மிகவும் சாதகமான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. சிறப்பானதொரு சூழலை உருவாக்குவதற்கான தீர்க்கமான முடிவுகளை புதிய அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு புதிய அரசாங்கம் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தது. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரங்கள் பல பாராளுமன்றத்திற்கும், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. நீதியானதும் நியாயமான தேர்தலுக்காக சுயாதீன ஆணைக்குழு நிறுவப்பட்டு, அதற்கான அதிகாரங்களும முழுமையாக வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் மக்களுக்கு பொறுப்புகூறும் வகையிலான புதிய தேர்தல் முறைமையையும் நாம் கொண்டுவரவுள்ளோம். அதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்கள் மற்றும் பொது மக்களும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த அரசாங்கம் பதவியேற்று பல வருடங்கள் ஆட்சி அமைத்ததை போன்றே இவர்களது விமர்சனங்கள் அமைந்துள்ளன. எனினும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பத்து மாதங்களே பூரத்தியாகியுள்ளன. ஆனால் எந்தவொரு அரசாங்கத்தினாலும் நிறைவேற்ற முடியாதவற்றை நாம் செய்து முடித்துள்ளோம்.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தினோம். நீதியான முறையில் பாராளுமன்ற தேர்தலை நடத்தினோம். சுயாதீன ஆணைக்குழுக்கு அதிகாரத்தை முழுமையாக வழங்கினோம். இது போன்று பல்வேறு மாற்றங்களை பத்து மாதங்களில் செய்து முடித்துள்ளோம்.
இந்நிலையில் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்களை பிரதமரும் நானும் தற்போதே ஆரம்பித்து விட்டோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் கீழ் உள்ள அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கும் , சுயாதீன ஆணைக்குழுவிற்கும் வழங்குவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம். அதேபோன்று மக்களுக்கு பொறுப்பு கூறும் வகையிலும், ஊழல் மோசடிக்கார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் புதிய தேர்தல் முறைமையையும் அமுல்ப்படுத்தவுள்ளோம். இதற்கான அமைச்சரவை பத்திரத்தை இன்று கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தொடரின்; போது சமர்ப்பிக்கவுள்ளேன்.
எமது புதிய அரசாங்கத்தின் அமைச்சரவைக்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. எந்தவொரு அமைச்சர்களினாலும் பாரியளவில் விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் வெளிப்படுத்த முடியும். எனினும் இதற்கு முன்னரான அரசாங்கத்தில் இவ்வாறான சுதந்திரம் இருக்கவில்லை. ஆகவே பொறுப்புகூறலை மையமாக கொண்டு அனைத்து அமைச்சர்களும் செயற்படவேண்டும்.
எனவே தற்போது இரட்டை பிரஜாவுரிமையை பெறும் அனைவரும் நாட்டின் வளர்ச்சிக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கவேண்டும். நாட்டில் நிலைக்கொண்டுள்ள வறுமையை ஒழித்து கட்டுவதற்கும், சிறந்த கல்வி மற்றும் சுகாதார துறையை மேம்ப்படுத்துவதற்கும் புதிய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.