இலங்கை – இந்தியப் பாலம் ஆபத்தானது – மெதகொட அபயதிஸ்ஸ தேரர்
நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்கள் அதிகரித்துள்ள நிலையில் இலங்கை- இந்தியப் பாலம் நாட்டுக்கு ஆபத்தானது என்று மெதகொட அபயதிஸ்ஸ தேரர் எச்சரித்துள்ளார்.
தேசிய அமைப்புகளின் ஒன்றியம் நேற்று கொழும்பு, நாராஹேன்பிட்ட அபயராம விகாரையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
இலங்கைத் தீவானது சுற்றிலும் உள்ள கடல் பிரதேசம் காரணமாகவே வரலாற்றுக் காலம் தொட்டு பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.இந்நிலையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாலம் நிர்மாணிக்கும் விடயத்தில் இந்தியா கடுமையாக ஆர்வம் காட்டி வருகின்றது. எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய இலங்கையோ இந்த விடயத்தில் சம்மதத்திற்கு அறிகுறியாக மௌனமாக இருக்கின்றது.முற்காலத்தில் இலங்கையில் ஒரு விபீஷணன் மட்டுமே இருந்தான். அவனது காட்டிக்கொடுப்பே வரலாற்றில் இலங்கையை அழித்துவிட்டது.
தற்போது நாட்டில் காட்டிக் கொடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறான தரைவழித்தொடர்பு இலங்கைக்கு கடும் ஆபத்தாக முடியலாம் என்றும் அபயதிஸ்ஸ தேரர் தொடர்ந்தும் எச்சரித்துள்ளார்.