Breaking News

இன்று கூட்டமைப்பை சந்திக்கிறது ஐ.நா குழு

இலங்கைக்கான ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டுள்ள பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் பிரதிநிதிகள், இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்கவுள்ளதுடன், இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்து தமது பயணம் குறித்த அறிக்கையையும் சமர்ப்பிக்கவுள்ளனர்.

பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கொழும்பில், இன்று மாலை 5 மணியளவில் முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கான ஐ.நா பணியகத்தில் நடக்கவுளள்ள இந்தச் சந்திப்பில், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்கிடடையே, காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவினரை நேற்று மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். கொழும்பில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அதேவேளை, பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் சிறிலங்கா பயணம் தொடர்பாக அறிக்கை இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.

கடந்த வாரம் இலங்கைக்கு வந்த, பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவினர், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று காணாமற்போனோர் தொடர்பாக விசாரணைகளையும் ஆய்வுகளையும் மேற்கொண்டது.

அத்துடன், காணாமற்போனோர் விவகாரத்துடன் தொடர்புடைய அரச மற்றும் அரசசார்பற்ற பிரதிநிதிகளுடனும் பேச்சுக்களை நடத்தியிருந்தது. இந்தக் குழுவினர் தமது பயணத்தின் முடிவில் இன்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து, தமது பயணம் குறித்த அறிக்கையைக் கையளிக்கவுள்ளனர்.