Breaking News

விடைபெற்றார் மிச்சேல் ஜான்சன்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிச்சேல் ஜான்சன் ஓய்வு பெறவுள்ளதாக இன்று அறிவித்துள்ளார். 

இதன்படி 34 வயதான இவர் நியூசிலாந்துக்கு எதிராக பெர்த் மைதானத்தில் இன்று முடிந்த டெஸ்டோடு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 

73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ஜான்சன் ஓய்வு முடிவு குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:– 

ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான நேரமாகும். மிகுந்த மகிழ்ச்சியுடன் ஓய்வு முடிவை அறிவிக்கிறேன். எனது கிரிக்கெட் பயணம் நம்ப முடியாத வகையில் இருந்தது. 

எந்த ஒரு பயணத்துக்கும் முடிவு உண்டு. அவுஸ்திரேலிய அணிக்காக நான் நீண்ட காலம் சிறப்பாக பந்துவீசியது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

மிச்சேல் ஜான்சன் 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 311 விக்கெட் கைப்பற்றியுள்ளார். சராசரி 28.52 ஆகும். 61 ஓட்டங்களைக் கொடுத்து 8 விக்கெட்டுக்களை கைப்பற்றியது அவரது சிறந்த பந்துவீச்சு ஆகும். 12 முறை 5 விக்கெட்டுக்கு அதிகமாகவும், 3 தடவை 10 விக்கெட்டுக்கு அதிகமாகவும் கைப்பற்றி உள்ளார். 

மேலும் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய அவுஸ்திரேலிய வீரர்களில் ஜான்சன், வார்னே (708), மெக்ராத் (563), டென்னிஸ் லில்லி (355) ஆகியோருக்கு அடுத்தப்படியாக 4–வது இவர் இடத்தில் உள்ளார். 

மேலும் 153 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 239 விக்கெட்டுக்களை இவர் எடுத்துள்ளார். 31 ஓட்டங்களை கொடுத்து 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியது ஒருநாள் போட்டிகளில் இவரது சிறந்த பந்துவீச்சாகும். 

ஒருநாள் போட்டியிலும் அதிக விக்கெட் கைப்பற்றிய அவுஸ்திரேலிய வீரர்களில் ஜான்சன் 4–வது இடத்தில் உள்ளார். இதேவேளை முப்பது 20க்கு 20 ஆட்டத்தில் விளையாடியுள்ள இவர் 38 விக்கெட்டுக்களை கைப்பற்றி உள்ளார். 

ஆசஷ் டெஸ்ட் தொடருக்கு பிறகு மைக்கேல் கிளார்க், ஹாடின், ஹாரிஸ், ரோஜர்ஸ், வாட்சன் ஆகியோர் ஓய்வு பெற்றனர். அந்த வரிசையில் தற்போது ஜான்சனும் இணைந்துவிட்டார்.