பொய்யான வாக்குறுதிகளை வழங்கி அரசியல் குளிர்காய வேண்டாம் - அனந்தி சசிதரன்
தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அவர்களுடைய போராட்டத்தை சிதைக்கின்ற விதத்திலும் திசைதிருப்புகின்ற விதத்திலும் சில அரசியல்வாதிகள் பொய்யான வாக்குறுதிகளையும், அழுத்தங்களையும் பிரயோகித்து வருகின்றனர்.
எனவே தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பாக எவரும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி அரசியல் குளிர்காய வேண்டாம் என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
உண்ணாவிரதம் இருப்பவர்களை சிறையில் சென்று சந்திக்கின்ற அரசியல் வாதிகள் கைதிகளுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கி உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோருவதாக அறியமுடிகின்றது. நீண்டபல காலங்களாகவே தமிழ் அரசியல் கைதிகள் நாட்டில் உள்ள பல சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களது விடுதலை தொடர்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்த போதும் அதன் பலன் முழுமை அடைந்ததாக இல்லை.
சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டு பல வருடங்களாக சித்திரவதைகளை அனுபவித்து காலத்துக்கு காலம் சிறைச்சாலைகளில் கட்டவிழ்த்துவிடப்படும் பேரினவாதிகளின் இனக்கலவரத்தில் தப்பிப்பிழைத்து போதிய ஊட்டச்சத்தற்ற மட்டுப்படுத்தப்பட்ட உணவுடன் உளவியல் தாக்கத்திற்கு ஆளாகி நடைப்பிணங்களாக வாழ்ந்துவரும் இவர்களை அரசு மனிதாபிமான ரீதியில் பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டும். கடந்த ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் முடிவான பிரேரணையில் அரசியல்கைதிகளை விடுவிப்பதாக அரசுஒப்புக்கொண்டுள்ளது. நல்லாட்சி முகமூடியை அணிந்துகொண்டு சர்வதேசத்திற்கு ஒருமுகமும் தமிழர்களிற்கு ஒருமுகமும் காட்டும் இவ்வரசின் உண்மை முகத்தை உலகம் வெகுவிரைவில் அறிந்து கொள்ளும்.
இந்நிலையில் பிணை வழங்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கான பிணை நிபந்தனை என்பது மிகவும் கடினமானதாகவே இருக்கின்றது. திறந்த வெளி சிறைச்சாலையாகவே அவர்களின் பிணையுடனான விடுதலை அமைகின்றது. கடந்த காலங்களில் சில கைதிகள் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட பின்னர் நீதிமன்ற வாயிலிலேயே மீண்டும் கைதுசெய்யப்பட்டதும், சில தினங்களில் மீண்டும் கைதுசெய்யப்பட்டதும் வரலாற்றில் உண்டு.
அரசாங்கம் தமிழர்தரப்பிற்கு நல்லெண்ண சமிக்ஞையை காட்டுவதாக இருந்தால் அரசியல் கைதிகளை உண்மையான இதய சுத்தியுடன் அனைவருக்கும் பொதுமன்னிப்பை வழங்கி விடுவிப்பதை செயலில் காட்டவேண்டும்.
தமது வாக்குறுதியை காப்பாற்றுவது போன்று பாசாங்கு செய்து நீதித்துறையின் நடவடிக்கைகள் மூலமாக அரசியல் கைதிகளின் கழுத்தை இறுக்குகின்ற முயற்சியினை அரசாங்கம் கைவிட வேண்டும்.
அரசியல் கைதிகள் விடயத்தில் சிறிய விட்டுக்கொடுப்பைக்கூட நல்லெண்ண அடி-ப்ப-டையில் வெளிப்படுத்தாத அரசாங்கம் தமிழ் மக்களுக்கான நியாயமான அரசியல் தீர்வு விடயத்தில் எவ்வாறு செயற்படப்போகின்றது என்று கேள்வியும் உள்ளது என அவ் அறிக்கையில் குறிப்பிடப்-பட்டுள்ளது.