Breaking News

அரசியல் கைதிகள் விடயத்தில் தவறிழைத்து விட்டாராம்!- கருணா


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் தான் பிரதி அமைச்சராக இருந்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வந்தபோதும், அது குறித்து அழுத்தம் கொடுக்காமை தனது தவறு என விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு தான் அழுத்தம் கொடுத்திருந்தால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நிபந்தனைகள் இன்றி கைதிகளை விடுதலை செய்திருப்பார் என்று குறிப்பிட்ட கருணா, மஹிந்த ராஜபக்ஷ உறுதியான தீர்மானங்களை எடுக்ககூடிய சிறந்த தலைவர் என்றும் கூறினார்.

அரசியல் கைதிகள் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரிய தவறிழைத்துள்ளதாகவும், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, எந்தவொரு உடன்படிக்கைகளும் இன்றி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவினை வழங்கியமை முட்டாள்தனமான முடிவு என்றும் கருணா குற்றம் சுமத்தினார்.

அவர்களின் முடிவிற்கு ஏற்ப மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்த மக்களின் எதிர்ப்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.