Breaking News

சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள போவதில்லை : செல்வம்

இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து, ஜனாதிபதி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள சர்வகட்சி கூட்டத்தில் தாம் கலந்துகொள்ள போவதில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி ஒருமித்த தீர்மானத்தை எடுக்காததால், தமிழீழ விடுதலை இயக்கம் சார்பில் தாம் கலந்துகொள்ள போவதில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.

அரசியல் கைதிகள் குறித்து நேற்றைய தினம் பதில் வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தபோதும் அது இடம்பெறவில்லையென சுட்டிக்காட்டியுள்ள அவர், அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதே தமது எதிர்பார்ப்பென குறிப்பிட்டார்.

ஜெனீவா தீர்மானம் குறித்து கட்சிகள் தமது ஆலோசனைகளை இன்றுவரை எழுத்துமூலம் சமர்ப்பிக்க முடியுமென கடந்த ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி நடைபெற்ற முதலாவது சர்வகட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.