உங்களின் விடுதலைக்காக தொடர்ந்தும் போராடுவோம் : வடக்கு முதல்வர் கைதிகளிடம் தெரிவிப்பு
நாம் உங்களுக்காகவே இருக்கின்றோம். உங்களின் போராட்டத்திற்கு ஆதரவாக இருப்பதுடன் உங்களின் விடுதலைக்காக தொடர்ந்தும் போராடுவதற்கு தயாராகவே இருக்கின்றோமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
பலர் இறுதிச் சந்தர்ப்பமான புனர்வாழ்வுக்குட்பட்டு விடுதலையாவது குறித்து தமது விருப்புக்களை தெரிவித்துள்ள நிலையில் அதுகுறித்து ஆராயப்பட்டுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
விடுதலையை கோரி 9ஆவது நாளாகவும் உண்ணாவிரதத்தை நேற்றைய தினம் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்திருந்தனர். இந்நிலையில் மகசின் சிறைச்சாலைக்கு விஜயம் செய்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன் கைதிகளின் நிலைமைகள் மற்றும் அவர்களின் கோரிக்கை தொடர்பாக ஆராய்ந்திருந்தார். கைதிகளுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெ ளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முதலமைச்சரின் விஜயத்தின் போது சிரேஷ்ட சட்டத்தரணி இரத்தினவேல், மனித உரிமைகளுக்கான இல்லத்தின் தலைவர் ஷெரின் ஷேவியர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.
முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். அவர்களின் உண்ணாவிரதப்போராட்டத்திற்காக போராடவேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.
அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும்இ விடுதலைக்கு வலியுறுத்தியும் அரசியல் தரப்புக்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து கடந்த வெள்ளிக்கிழமை பாரியளவிலான ஹர்த்தாலை அனுஷ்டித்திருந்தோம். அரசியல் கைதிகளின் போராட்டத்தால் வடக்கு கிழக்கு மக்கள் ஒன்றுபட்டுள்ளார்கள். கைதிகளின் விடுதலை தொடர்பாக உரிய பதிலொன்றை இன்றைய தினம் (நேற்று) அளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பின்போது என்னிடத்தில் கூறியிருக்கின்றார்.
அதனை விடவும் இன்று(நேற்று) அரசியல் தரப்பினர் சட்டத்தரப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு பட்ட வகையில் பல உயர் மட்டச் சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. அதன் பின்னர் உரிய பதிலொன்று கிடைக்குமென்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. அக்கருத்துப் பரிமாற்றங்களின் அடிப்படையிலேயே நாம் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்க முடியும்.
கைதிகளின் கோரிக்கைக்கு அமைவாக பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்வதற்கு மறுப்புத் தெரிவிக்கப்படும் பட்சத்தில் அவர்களின் குற்றங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்குரிய புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலையளிப்பது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது.
அதேவேளை நாளையதினம் (இன்று) கைதிகள் விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் ஒன்றுகூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயவுள்ளோம்.
மேலும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி தற்போது மேற்கொண்டு வரும் போராட்டம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து பல்வேறு நாடுகளின் தூதரகங்களுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளேன். அவர்களும் இவ்விடயத்தில் ஒத்துழைப்புக்களை வழங்கி நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கின்றேன்.
அண்மையில் வடக்குமாகாண சபை அமைச்சர்கள் கைதிகளை நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர். அன்றைய தினம் எனக்கு சந்திக்கமுடியாது போயிருந்தது. தற்போது அவர்களை சந்தித்திருக்கின்றேன். உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு உடல் நிலை பாதிப்படைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்ட நிலையில் ஆபத்தான கட்டத்தினை கடந்திருக்கின்றார்கள். அவர்கள் சோர்வுடன் காணப்படுகின்றார்கள் என்றார்.