மஹிந்தவை மீண்டும் டிச.17 இல் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராக பணிப்பு
தம்மீதான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி மீண்டும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியின் போது விளம்பரம் செய்தமைக்கான கட்டணத்தை செலுத்தாமை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக மஹிந்த இன்று பாரிய மோசடி மற்றும் ஊழல் விசாரணை பிரிவில் முன்னிலையாகிருந்தார்.
அதன் விசாரணைகளை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் பல வருடங்களாக தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தவர்களை தமது அரசாங்கம் சிறைப்பிடித்த போதும், தற்போதைய அரசாங்கம் தீவிரவாதிகளை விடுதலை செய்து வருவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
அதுமாத்திரம் இன்றி தமது உயிரை பணயம் வைத்து தீவிரவாதத்தை இல்லாதொழித்த இராணுவ வீரர்களை அரசாங்கம் சிறைபிடித்து வருவதுடன், நாட்டில் தீவிரவாதத்தை ஒழித்து சமாதானத்தை உருவாக்கிய தம் மீது போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி கேள்வி எழுப்புவதாகவும் அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.