சோபித்த தேரரின் மரணத்தில் சந்தேகம்?
காலம் சென்ற வணக்கத்துக்குரிய மாதுலுவாவே சோபித்த தேரர் சுகவீனமுற்றதன் பின்னர், வைத்தியசாலைகள் பலவற்றில் சிகிச்சைப் பெற்று வந்தமை சிக்கலுக்குரியது என்று பேராசிரியர் காலோ பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சோபித்த தேரர் குறுங்காலத்தில் 6 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.அத்துடன் அவரது மரணம் சந்தேகத்துக்குரிய ஒன்று என்று சில வாராந்த பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் கடந்த செப்டம்பர் மாதம் 10ம் திகதி கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.அதன் பின்னர் அவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்.இதனை அடுத்து அவர் மாலபேயில் உள்ள நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் அனுமதி பெற்றிருந்தார்.
இது சிக்கலுக்குரியது என்று அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.குறிப்பாக அவர் ஓய்வாக இருப்பதற்காகவே இந்த வைத்தியசாலையில் அனுமதி பெற்றிருந்தாலும், அவரை பார்வையிட வருகின்றவர்களின் எண்ணிக்கையை வைத்தியசாலையினால் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது.
இதனை குறித்த நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையின் பணிப்பாளரும் ஒப்பு கொண்டுள்ளார்.இதனை அடுத்து அவர் நொவம்பர் மாதம் 3ம் திகதி சிங்கபூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 8ம் திகதி காலமானார்.
இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்ட சோபித்த தேரரை பாதுகாக்க, அனைத்து வைத்திய தரப்பும், சுகாதார சேவைகளும் தவறிவிட்டதாக பேராசிரியர் காலோ பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.