Breaking News

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து இன்று முடிவு – பிரதமர் செயலகத்தில் முக்கிய கூட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக இன்று தமது முடிவை அறிவிப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆராய  பிரதமர் தலைமையில் இன்று முக்கிய கூட்டம் இடம்பெறவுள்ளது.


தமது விடுதலைக்காக தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இவர்களின் விடுதலை குறித்து இன்று தமது முடிவை அறிவிப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 12ஆம் நாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு உறுதி அளித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பான ஆராய்வதற்காக பிரதமர் செயலகத்தில் இன்று முக்கிய கூட்டமொன்று நடைபெறவுள்ளது.சட்டம் ஒழுங்கு அமைச்சர், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் கோப்புகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை, சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் அடங்கிய அறிக்கை இன்று சட்டமா அதிபரினால்ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்.

சட்டமா அதிபரின் அறிக்கையையடுத்தே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த தீர்மானத்தை அறிவிப்பதாக ஜனாதிபதி ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, உண்ணாவிரதம் இருந்து வரும் அரசியல் கைதிகளின் உடல் நிலை மோசமடைந்து வருவதை சுட்டிக்காட்டி, அவர்களின் விடுதலையை துரிதப்படுத்துமாற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்றுமுன்தினம் மாலை அவசர கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதில், அரசியல் கைதிகள் விவகாரத்தினால் அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார என்பது குறிப்பிடத்தக்கது.