Breaking News

அடுத்த கட்டம் குறித்து ஆராய நாளை கூட்டமைப்பின் முக்கிய கூட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் நாளை கூடி ஆராயவுள்ளனர்.

தமக்குப் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்யக் கோரி, தமிழ் அரசியல் கைதிகள், கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு ஆதரவு தெரிவித்தும், அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும், கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

எனினும், இலங்கை அரசாங்கம் இதுவரை சாதகமான பதில் எதையும் தராத நிலையில், அடுத்த கட்டம் நடவடிக்கை குறித்து ஆராயவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

வவுனியாவில் நேற்று மாலை நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பிரமுகர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள விடுதியில் மாவை சேனாதிராசாவின் தலைமையில் நடந்த கூட்டத்தின் முடிவில், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,“நாளை நடைபெறும் முக்கிய கூட்டத்துக்கு முன்னதாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளேயும் வெளியேயும் உள்ள பொது அமைப்புக்களுடனும் கைதிகளின் விடுதலைக்காக ஜனநாயக வழிமுறையில் எடுக்கப்பட வேண்டிய வழிமுறைகள் பற்றி கலந்தாலோசிக்கப்படும்.

அத்துடன், தமிழ்க் கைதிகளின் விடுதலைக்காக இந்தியா உள்ளிட்ட அனைத்துலக நாடுகளின் இராஜதந்திரிகளுடனும் பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளது ” என்றும் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன், புளொட் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் சந்திரகுலசிங்கம், முன்னாள் மன்னார் நகரசபை உறுப்பினர் ரட்ணசிங்கம் குமரேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.