15 பேரின் உடல்நிலை கவலைக்கிடம்! மருத்துவ உதவிகளையும் ஏற்க மறுப்பு : போராட்டம் தொடர்கிறது
தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதி கள் அனைவரினதும் உடல் நிலைமை மோசமடைந்துள்ள நிலையில் 15பேரின் நிலைமை கவலைக்கிடமாகியுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
நேற்று முன்தினம் நண்பகலிலிருந்து மருத்துவ உதவிகள் அனைத்தையும் நிராகரிப்பதாக உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்திருந்த நிலையில் எட்டாவது நாளாகவும் நேற்றைய தினம் தமது போராட்டத்தை தொடர்ந்திருந்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் உடல் நிலை சோர்வடைந்திருந்த மேற்குறித்த 15பேரின் நிலைமை கவலைக்கிடமானது.அதனையடுத்து சிறைச்சாலை வைத்தியர்களால் வழங்கப்பட்ட உடனடி மருத்துவ உதவிகளையும் இவர்கள் ஏற்க மறுப்புத்தெரிவித்ததாக சிறைச்சாலைத் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.
அநுராதபுரம் சிறைச்சாலையில்
தடுத்து வைக்கப்பட்டுள்ள மரியசீலன், சிவசீலன், தவரூபன், ஜெயக்குமார், மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தர்ஷன், திரைப்படக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர்(தமிழ்பிரிவு), கனகசபை தேவதாஸன், கிருஷ்ணகாந்தன், தனயுகன், பிரபாகரன், யாழ்.சிறைச்சாலையிலுள்ள விஷால் இரத்தினம் பூபாலசிங்கம், மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள முரளிதரன், யோகராஜா, தும்பறை போகம்பரைச் சிறைச்சாலையிலுள்ள கைதியொருவர் உள்ளிட்ட 15பேரே உடல் நிலை கவலைக்கிடமான நிலையை அடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
இம்மாதம் ஏழாம் திகதிக்கு முன்னதாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக உரிய தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருந்த போதும் அவ்வாக்குறுதி நிறைவேற்றிருக்கப்பட்டிருக்காததன் காரணமாக மறுதினமான 8ஆம் திகதி மீண்டும் சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை கைதிகள் ஆரம்பித்திருந்தனர்.
நேற்று மாலை வரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல அரசியல் பிரமுகர்கள் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளை நேரில் சென்று பார்வையிடல், வடக்கிழக்கில் பூரண ஹர்த்தால், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகள் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளுக்கு ஆதரவான நடவடிக்கைள் சிறைச்சாலைக்கு வெளியில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற போதும் அரசாங்கத்தரப்பினால் தற்போது வரையில் உறுதியான வாக்குறுதிகள் எவையும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.