மைத்திரி ஆட்சியில் புலிகள் தலைத் தூக்குகின்றனர் : லொஹான் ரத்வத்தே
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் தலைதூக்கத் தொடங்கியுள்ளதாகவும், இதனால் புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்யக் கூடாது என்றும் கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தே கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்கான பிணை குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
‘கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதியின் தலைமையில் சுதந்திரக் கட்சியினால் வெற்றியீட்ட முடியாது போயுள்ளது. அதுமாத்திரமன்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தோற்கடித்தார். அவ்வாறான ஒருவரினால் கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல முடியாது.
இதனால், கட்சியின் அடிமட்ட ஆதரவாளர்கள் கட்சித் தலைமையின் மீது அதிருப்தி கொண்டுள்ளனர். எனவே சந்தர்ப்பம் வரும் வரையில் காத்திருக்குமாறு நான் அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.
நாட்டின் நிலைமை அதிருப்தி அளிக்கும் வகையில் காணப்படுவதுடன், யுத்த வெற்றி நிச்சயமற்றத்தன்மையை எதிர்நோக்கியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் தலைதூக்கத் தொடங்கியுள்ளனர். எனவே தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்படக் கூடாது’ எனவும் கூறினார்.