Breaking News

சுமந்திரன் கூறிய கருத்திற்கு தகுந்த பதிலை வழங்குவேன் : விக்னேஸ்வரன்

கட்சியில் இருந்து என்னை நீக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறிய கருத்திற்கு தகுந்த பதிலை நிச்சையமாக வழங்குவேன் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று நண்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள அவருடைய வாசஸ்தலத்தில் ஊடகவியலாளர்களை முதலமைச்சர் சந்தித்தார். இதன் போது ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக முதலமைச்சர் தெரிவிக்கையில்:-

சுமந்திரன் என்னைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஏதோ ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். என்னை கட்சியில் இருந்து நீக்க வேண்டியதற்கான காரணங்கள் சிலவற்றினையும் அவர் தனது கருத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவருடைய கருத்திற்கு தக்கபதிலை நான் வழங்கவுள்ளேன். ஆனால் அவரைப் போன்று ஊடகங்கள் ஊடாக அந்தப் பதிலினை நான் வழங்கமாட்டேன். அவரால் கேட்கப்பட்ட கேள்விகளைத் தவிர, இவருடைய கருத்து தொடர்பாக பல கேள்விகள் எழுந்துள்ளது. அவை அனைத்திற்குமான மொத்தப் பதிலையும் அவருக்கு எழுத்து மூலமாக தெரிவிக்க முடிவு செய்துள்ளேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.