ஜனாதிபதியுடனான சந்திப்பில் நடந்தது என்ன? – விளக்குகிறார் விக்கி (காணொளி)
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தன்னுடைய முடிவை எதிர்வரும் திங்கட்கிழமை தெரிவிப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், ரி.குருகுலராஜா, டாக்டர் பி.சத்தியலிங்கம், பி.டெனீஸ்வரன் ஆகியோர் இன்று காலை 11.00 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் சந்தித்துப்பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போதே அவர் இவ்வாறு உறுதிமொழி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபை எதிர்கொள்ளும் பிரச்சினைகள், தேவைகள், மத்திய அரசாங்கத்தினால் எதிர்கொள்ளப்படும் தடைகள் என்பவற்றை விளக்கும் விரிவான அறிக்கை ஒன்றை முதலமைச்சர் சந்திப்பின் ஆரம்பத்திலேயே ஜனாதிபதியிடம் கையளித்தார்.
இதன்போது தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை தொடர்பில் முக்கியமாக ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்திருந்தார்.
இலங்கையில் இரண்டு தடவைகள் ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜே.வி.பி.யினருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை சுட்டிக்காட்டிய வடமாகாண முதலமைச்சர், அதேபோல தமிழ் அரசியல் கைதிகளும் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
அதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார். முதலமைச்சரின் கருத்தை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, அனைத்துக் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை தான் ஏற்றுக்கொள்வதாகவும், இருந்த போதிலம் இந்த விடயத்தில் அரசியல் ரீதியாக சில பிரச்சினைகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இருந்தபோதிலும், இதனை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த முதலமைச்சர், ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி கைதிகளின் விடுதலைக்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரினார்.
தமிழ்க் கைதிகளை தொடர்ந்தும் தடுத்துவைத்திருப்பதால் பாதிக்கப்படுபவர்கள் அவர்கள் மட்டுமல்ல எனத் தெரிவித்த முதலமைச்சர், கைதிகளுடைய குடும்பத்தினரும் இதனால் சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்துவருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
தினசரி தன்னைச் சந்திக்கும் கைதிகளின் உறவினர்கள், இது தொடர்பில் எழுப்பும் கேள்விகளுக்கு தான் பதிலளிக்க வேண்டியிருப்பதாகவும் முதலமைச்சர் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
இதனையடுத்து கைதிகளின் முழுமையான கோவைகளையும் தனக்கு அனுப்பிவைக்குமாறு சட்டமா அதிபரைப் பணித்த ஜனாதிபதி, எதிர்வரும் திங்கட்கிழமை இந்த விவகாரத்துக்கு தான் பதிலளிப்பதாகவும் முதலமைச்சரிடம் உறுதியளித்துள்ளார்.