Breaking News

இளைஞர் நாடாளுமன்ற தேர்தல் - மன்னார் மாவட்டத்தில் 12 பேர் போட்டி



நடைபெறவுள்ள இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் 4547 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், 

2015 ஆம் ஆண்டிற்கான இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்கின்ற தேர்தலானது தற்போது இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று ஊக்கத்தையும், ஆக்கத்தையும் ஏற்படுத்தயுள்ளது. குறித்த இளைஞர் நாடாளுமன்ற தேர்தலுக்காக மன்னார் மாவட்டத்தில் இருந்து வேட்பாளர்களை தெரிவு செய்துள்ளோம். மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேச செயலாளர்கள் பிரிவுகளிலும் இருந்து 14 பேர் வேட்பாளர்களாக விண்ணப்பம் செய்திருந்தனர்.

அவர்களில் இருவரின் விண்ணப்பங்கள் நிறாகரிக்கப்பட்டுள்ளது. மடு மற்றும் முசலி பிரதேசத்தைச் சேர்ந்த இரு வேட்பாளர்களின் விண்ணப்பங்களே நிறாகரிக்கப்பட்டுள்ளது. தற்போது 12 பேர் மன்னார் மாவட்டத்தில் இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதற்கான சகல நடவடிக்கைகளையும் மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மேற்கொண்டு வருகின்றது.

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 5 பேரூம், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் 2 பேரூம், மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் 1 வேட்பாளரும், நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் ஒரு வேட்பாளரும், முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் 3 பேரூம் தற்போது இளைஞர் நாடாளுமன்ற தேர்தலின் வேட்பாளர்களாக மன்னார் மாவட்டத்தில் களமிங்கியுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 4547 வாக்களர்கள் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 6401 இளைஞர் யுவதிகள் பதிவு செய்யப்பட்டுள்ள போதும் 4547 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 1793 பேரும், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் 1203 பேரூம், மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் 424 பேரூம், நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் 802 பேரூம், முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் 505 பேரூம் இவ்வாறு வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர். இத்தேர்தல் எதிர்வரும் 7 ஆம் திகதி இடம் பெறவுள்ள நிலையில் சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளது.

தேர்தல் இறுதி முடிவுகளை உடனடியாக நாங்கள் வெளியிட தயாராக இருக்கின்றோம். கடந்த காலங்களை விட தற்போது நடைபெறவுள்ள இத் தேர்தலானது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய தலைவர் ஜி.எஸ்.எரந்திக்க அவர்கள் சிறந்த முறையில் நடை முறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். என தெரிவித்துள்ளார்.