கடத்தல், கொலை, கொள்ளைகளுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை - என்கிறார் கோத்தா
கடந்த காலத்தில் இலங்கையில் நடந்த கடத்தல்கள், கொலை கொள்ளைகளின் பின்னணியில் நான் இருப்பதாக கூறும் கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
என்னை பழி வாங்கவே அரசாங்கத்தி னால் ஒருசிலர் ஏவிவிடப்பட்டுள்ளனர் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்தார். தாம் செய்த குற்றங் களில் இருந்து தப்பித்துக்கொள்ள என்மீது பொய்யான குற்றத்தை சுமத்துகின்றனர். எனவும் அவர் குறிப்பிட்டார்.
மஹிந்த அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டு வரும் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்
நாட்டின் தேசிய பாதுகாப்பினை பலப்படுத்தும் நோக்கத்திலும் தேசிய பாதுகாப்பை கட்டியெழுப்பும் வகையிலும் கடந்த காலத்தில் நாம் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் இப்போது அரசியல் மயப்படுத்தி எமது செயற்பாடுகளை மோசமாக விமர்சித்து வருகின்றனர். நான் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய காலப்பகுதியில் என்னால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரச சொத்துக்கள் விரயமாக்கப்படவில்லை. அதேபோல் அரசாங்கத்தின் கட்டளையை மீறி எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவும் இல்லை. ஆனால் கடந்த காலங்களில் பல வழிகளிலும் ஊழல் மோசடிகளை மேற்கொண்டதாக பல தரப்பினரும் எமக்கு எதிராக குற்றம் சுமத்தி வருகின்றனர்.
அதேபோல் ஆயுத களஞ்சிய மோசடியில் நாம் நேரடி தொடர்பு கொண்டிருப்பதாகவும் இவை சட்டவிரோத செயற்பாடுகள் எனவும் கூறுகின்றனர். ஆனால் எவன்கார்ட் மிதக்கும் ஆயுத கலஞ்சியம் தொடர்பில் எம்மிடம் விசாரணைகளை மேற்கொள்ள அழைத்தால் இந்த விவகாரம் தொடர்பில் என்னிடம் உள்ள முழு ஆதாரங்களையும் நான் வெளிப்படுத்துவேன். எவன்கார்ட் ஆயுத களஞ்சியசாலை தொடர்பில் எவ்வாறான கட்டமைப்பின் கீழ் நாம் செயற்பட்டோம், யாருடன் நாம் தொடர்புகளை வைத்திருந்தோம், சர்வதேச எல்லையில் எவ்வாறான பணியினை நாம் மேற்கொண்டோம் என்ற விடயங்கள் அனைத்தையும் நான் முன்வைப்பேன். அதேபோல் சட்டவிரோதமாக சர்வதேச ஆயுததாரிகள் எவரையும் நாம் பயிற்றுவிக்கவில்லை. இந்த குற்றச்சாட்டை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன்.
இலங்கையில் சட்டவிரோதமாக இயங்கிய புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளை முழுமூச்சுடன் முடிவுக்கு கொண்டுவந்து நாட்டில் தீவிரவாதத்தை முற்றாக அழித்த எமக்கு சர்வதேச பயங்கரவாதத்தை நாட்டுக்குள் கொண்டுவர எந்தத் தேவையும் இல்லை. கடந்த காலத்தில் நாம் எவ்வாறு யுத்தத்தை முன்னெடுத்தோம் எவ்வாறு மக்களை காப்பாற்றினோம் என்ற உண்மைகளை தெரிந்த ஒருசிலரே இன்று தமது பலத்தை அதிகரித்துக்கொள்ளும் நோக்கத்தில் பொய்யான கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
சரத் பொன்செகா எப்படிபட்டவர் என்று எனக்கும் நன்றாகவே தெரியும். அவரால் தான் யுத்தம் முடிவுக்கு வந்தது என்ற கருத்து தவறானது. அவர் இல்லாதிருந்தாலும் நாம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்திருப்போம். அதேபோல் ஜனாதிபதி மாளிகையின் அடியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு தளம் தொடர்பிலும் தவறான கருத்துக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த பதுங்குகுழியை ஜனாதிபதியின் பாதுகாப்பை கருதியே அமைத்தோம். மக்கள் மத்தியில் எம்மை குற்றவாளிகளாக காட்டி எம்மைக் கட்டுப்படுத்த ஒருசிலரை இந்த அரசாங்கம் ஏவிவிட்டுள்ளது. ஆகவே நான் இந்த கருத்துக்களை முழுமையாக கண்டிகின்றேன்.
அதேபோல் கடந்த காலத்தில் இலங்கையில் நடைபெற்ற அனைத்து கொலைகளுக்கும், ஆட்கடத்தல் நடவடிக்கைகளின் பின்னணியில் எனது பெயரை மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. ஆனால் மக்கள் விடுதலை முன்னணி நாட்டில் எவ்வாறான வகையில் செயற்பட்டது,இப்போது கட்சியில் இருக்கும் பலர் அன்று எவ்வாறு செயற்பட்டனர்
என்பதை மறந்துவிட்டனர். நாம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முன்னர் பலர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? ஆகவே தாம் செய்த குற்றங்களில் இருந்து தப்பித்துக்கொள்ள என்மீது பொய்யான குற்றத்தை சுமத்துகின்றனர். நான் அவ்வாறு குற்றமிழைத்துள்ளேன் என்பதற்கான ஆதாரங்கள் இருந்தால் இவர்கள் வெளிப்படுத்த வேண்டும்.