மியன்மார் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளை தனது கட்சி பெறும் - ஆங் சான் சூகி நம்பிக்கை
மியன்மார் பொதுத் தேர்தலில் தனது கட்சி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றிபெறும் என நம்புவதாக தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி தெரிவித்தார்.
மேற்படி வரலாற்று முக்கியத்துவம் மிக்க தேர்தல் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதையடுத்து அவர் அளித்த முதல் பேட்டியின் போதே இவ்வாறு கூறினார். ஆரம்ப தேர்தல் பெறுபேறுகளின் பிரகாரம் இந்தத் தேர்தலில் ஆங் சான் சூகியின் கட்சி மாபெரும் வெற்றி நிலையில் உள்ளது. எனினும் இறுதிப் பெறுபேறுகள் வெளிவருவதற்கு மேலும் சில நாட்கள் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தேர்தல் கடந்த 25 வருட காலப் பகுதியில் மியன்மார் எதிர்கொண்ட மிகவும் ஜனநாயக ரீதியான தேர்தலாக உள்ளது.
இந்நிலையில் ஆங் சான் சூகி இந்தத் தேர்தலிலான வாக்கெடுப்புகள் நியாயமான முறையில் இடம்பெறவில்லை என்ற போதும் அவை பெருமளவில் சுதந்திரமான முறையில் நடந்தேறியதாக குறிப்பிட்டுள்ளார். பல பிரதேசங்களில் கட்டாயப்படுத்தி வாக்களிக்க வைக்கும் செயற்கிரமங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மியன்மார் பாராளுமன்றத்திலான 664 ஆசனங்களில் சுமார் கால் பங்கு ஆசனங்கள் இராணுவத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதனால் பாராளுமன்றத்திலான பெரும்பான்மையை உறுதி செய்து கொள்ள தேசிய ஜனநாயக லீக் கட்சி போட்டியிடப்படும் ஆசனங்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
இந்நிலையில் மேற்படி தேர்தலில் தனது கட்சி 75 சதவீத வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் என ஆங் சான் சூகி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுவரை வெளியான தேர்தல் பெறுபேறுகளின் பிரகாரம் பாராளுமன்ற கீழ் சபைக்கான 440 ஆசனங்களில் 88 ஆசனங்கள் மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.அந்த ஆசனங்களில் 78 ஆசனங்களை தேசிய ஜனநாயக லீக் கட்சி வென்றெடுத்துள்ளது.
மேற்படி தேர்தலில் வாக்களிக்க சுமார் 30 மில்லியன் பேர் தகுதிபெற்றிருந்தனர். ரோஹிங்யா முஸ்லிம்கள் உட்பட அந்நாட்டின் பிரஜைகளாக அங்கீகரிக்கப்படாத இலட்சக்கணக்கான மக்களுக்கு இந்த தேர்தலில் வாக்களிக்க அனுமதியளிக்கப்படவில்லை.
ஆங் சான் சூகியின் கட்சி உட்பட பல கட்சிகள் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தத் தவறியிருந்தமை முஸ்லிம் சமூகத்தவர்கள் மத்தியில் கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.
இது தொடர்பில் ஆங் சான் சூகி விபரிக்கையில், தனது கட்சி முஸ்லிம்களை பாதுகாக்கும் எனவும் இன வெறுப்புணர்வை பரப்புபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் கூறினார்.மியன்மார் தேர்தல் ஆணையகம் திட்டமிட்டே தேர்தல் பெறுபேறுகளை தாமதப்படுத்துவதாக தேசிய ஜனநாயக லீக் கட்சியின் பேச்சாளர் வின் ஹடெயின் குற்றஞ்சாட்டினார்.
அந்நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியாக பதவி வகிக்க தடையை எதிர்கொண்டுள்ள ஆங் சான் சூகி, தான் எந்தவழி வகையிலாவது நாட்டைத் தலைமை தாங்கி வழிநடத்தவுள்ளதாக சூளு ரைத்துள்ளார். அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி யொருவரை தான் நியமிக்கவுள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்த ஆங் சான் சூகி, தான் வெற்றி பெற்ற கட்சியின் தலை வராக தொடர்ந்து கடமையாற்றுவதை எவ ராலும் தடுக்க முடியாது என்று கூறினார்.