Breaking News

நாளை மறுநாள் வடக்கு, கிழக்கில் பொது வேலைநிறுத்தப் போராட்டம் – கூட்டமைப்பு ஏற்பாடு

சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், வடக்கு கிழக்கில், நாளை மறுநாள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், இந்தப் பொது வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் மாலை 5 மணி வரை இந்தப் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு, ஆதரவு தருமாறு பொதுமக்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர், செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும், நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளை மறுநாள், வடக்கு கிழக்குப் பகுதிகளில் அத்தியாவசிய மருத்துவ சுகாதார சேவைகளைப் பாதிக்காத வகையிலும், இயல்பு நிலையை சீர்குலைக்காத வகையிலும், இந்த பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

பாடசாலைகள், உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களை மூடியும், போக்குவரத்துச் சேவைகளை இடைநிறுத்தியும், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான வடக்கு கிழக்கின் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை  அரசாங்கத்துக்கு வெளிப்படுத்த முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, நாளை மறுநாள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் முழு அடைப்பு போராட்டத்தை நடத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளும் வடக்கு கிழக்கு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவை அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.