எவன்கார்ட் விசாரணையை பொறுப்பேற்றார் ஜனாதிபதி
எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக்கப்பல் தொடர்பான அனைத்து விசாரணைகளையும் தான் பொறுப்பேற்று நடத்த தீர்மானித்திருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது அறிவித்துள்ளார்.
அனைத்து விசாரணைகளும் தனது மேற்பார்வையிலேயே இடம்பெறும் என்றும் அறிவித்துள்ள ஜனாதிபதி, சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரான திலக் மாரப்பனவின் இராஜினாமாவை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
பரபரப்பான சூழ்நிலையில் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது. இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.
காலை 10.30 மணிக்கு ஆரம்பமான அமைச்சரவைக் கூட்டம் நண்பகல் 12.30 மணிவரை இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்றுள்ளது.இதில் அமைச்சர்களுக்கிடையே காரசாரமான விவாதங்கள் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான டாக்டர் ராஜித சேனாரத்ன,
நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் ஆராயவே நேற்றைய விசேட அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றது. இவ் அமைச்சரவைக் கூட்டம் சுமார் 2 மணி நேரம் இடம்பெற்றது.
இதன்போது எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பாக நீதி அமைச்சர் விஜயேதாஸ ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அமைச்சர்களும் தமது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர்.
இக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டார்.அமைச்சர்கள் அனைவரினதும் கருத்துக்களை செவிமடுத்த ஜனாதிபதி, எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பான அனைத்து விசாரணைகளையும் தான் பொறுப்பேற்று நடாத்த தீர்மானித்திருப்பதாக அறிவித்ததோடு அனைத்து விசாரணைகளும் தனது மேற்பார்வையிலேயே நடைபெறுமென்றும் தெரிவித்தார்.
அதேவேளை எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக்கப்பல் தொடர்பில் விரைவில் முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் உட்பட உயர் அதிகரிகளுடன் விசேட உயர்மட்டக் கூட்டமொன்றை நடாத்த தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி இக்கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவும் கலந்து கொள்வார் என்றும் அறிவித்தார்.
அதேவேளை நேற்றைய விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் புனர்வாழ்வு அமைச்சர் திலக் மாரப்பன கலந்து கொள்ளவில்லை. பிரதியமைச்சரான துனேஷ் கன்கந்தவே இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அதேவேளை திலக் மாரப்பன தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதை ஏற்றுக்கொள்வதாகவும் ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்தார் என்றும் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பாக கடந்த 4 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது ஜே.வி.பி. எம்.பி.யும் எதிர்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுரகுமார திஸாநாயக்க கடுமையான குற்றச் சாட்டுக்களை முன்வைத்ததோடு நாட்டில் இடம்பெற்ற (கடந்த ஆட்சியில்) பல்வேறு ஊழல் மோசடிகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக காரசாரமான கருத்துக்களையும் தெரிவித்தார்.
இவ்விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர்களான திலக் மாரப்பன, விஜேதாச ராஜபக்ஷ ஆகியோர் எவன்கார்ட் ஆயுதக்கப்பல் சட்ட விரோதமானதல்ல என்றும், இதனை முன்வைத்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை கைது செய்ய முடியாது எனவும் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.