சுமந்திரன் உடன் இராஜினாமா செய்யவேண்டும்! அவருக்கு பயிற்சி தேவை என்கிறார் சங்கரி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உடன் இராஜினாமாச் செய்யவேண்டுமென கோரியுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வீ.ஆனந்தசங்கரி அவருக்கு அரசியல் அனுபவம் போதாமையால் பயிற்சி எடுக்கவேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ். தலைமைக் காரியாலயத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாண முதலமைச்சராக விக்கினேஸ்வரனின் பெயரை சுமந்திரன் தெரிவு செய்யவில்லை. சுமந்திரனுக்கு அந்த உரிமை இருக்கும் என்று நான் நினைக்கவுமில்லை. வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் மிகத் தீவிரமான போக்கை எடுக்கலாம். ஆனால் அதை வைத்து கட்சியில்இருந்து நீக்குவதற்கு சுமந்திரனுக்கு சக்தி இருக்குமோ தெரியவில்லை. இதனை சாதிக்க முடிந்தால் சாதிக்கட்டும் மக்களின் சக்தியை மிஞ்சிப் போய்விடுமா என்ன?
சுமந்திரன் புத்திசாலித்தனமாக உடன் இராஜினாமாச் செய்துவிட்டு சிறிது காலம் பயிற்சிக்குச் செல்வது சிறந்த செயற்பாடாகும். அவருக்கு அனுபவம் போதாதுள்ளது.
குறித்த பாராளுமன்ற உறுப்பினருடைய செயற்பாடுகளை பின்னோக்கி பார்ப்போமானால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தவர்கள் வேலையில்லாமலிருந்தவர்கள் எனக் கூறியவர். இந்தக் கருத்தைக் கூறியபோதே தூக்கி எறிந்திருக்கவேண்டும்.
மற்றுமொரு சந்தர்ப்பத்தில் போர்க் குற்றம் தொடர்பில் சிங்களவர் ஒருவர் விசாரணை மேற்கொள்ளும் போது சுமந்திரன் கூறிய கருத்து சாட்சியமாகும். ஏனெனில் விடுதலைப்புலிகளும் கொன்றார்கள். இராணுவமும் கொன்றார்கள் எனக் கூறியுள்ளார்.
மேலும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வெளிநாடு சென்று புலம் பெயர்ந்து வாழும் ஒரு குழுவை சந்தித்து விட்டு நாடு திரும்பினார். அவ்வாறு இருக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் வெ ளிநாட்டில் என்ன பேசினீர்கள் என கேட்ட போது உங்களிடம் தெரிவிக்கத் தேவையில்லை என்றும் தலைவரிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
மறுபக்கத்தில் கூட்டமைப்பின் தலைவர் தற்போது தலைகீழாக நிற்கின்றார். இவ்வளவு காலமும் பெரிய உண்மையை மறைத்து வைத்திருந்தவர் தற்போது திருவாய் மலர்ந்துள்ளார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை புலிகள் தான் ஆரம்பித்தவர்கள் என்று கூறிவந்தவர் மிக அண்மையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது நாங்கள் என்றும் கூறியுள்ளார்.
கூட்டமைப்பை உருவாக்கிய போது தலைவராக இருந்தது நான். இத்தகைய சூழலின் போது புௌாட் அமைப்பை சேர்க்கவில்லை ரெலோவையும் சேர்க்கவில்லை. பின்னர் கலந்துரையாடி இணைந்தோம் அதேபோல் ஈ.பி.ஆர்.எல்.எப். இணையாது இருந்தபோது மாவை. சேனாதிராஜாவுடன் கலந்து பேசி இணைத்துக்கொண்டோம். இதுவே உண்மையாகும்.
தமிழரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வா இறந்து 26 வருடங்களின் பின் விடுதலைப் புலிகளின் அரசியல் துறையில் இருந்தவரின் கட்டளைக்கு பயந்தே கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
அக் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியை உள்வாங்கி தமிழர் விடுதலைக் கூட்டணி தூக்கி எறியப்பட்டது. இத்தகையஉண்மையை ஏன் சம்பந்தன் வெளியிட வில்லை என்பது கேள்விக் குறியாக உள் ளது.
கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட விதம் தொடர்பில் போதிய ஆதாரம் என்னிடம் உள்ளது. தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று எமது பெரி யவர் தந்தை செல்வா கூறியது இன்று சரி யாக உள்ளது என்றார்.