அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வட, கிழக்கில் முழுமையான புறக்கணிப்புக்கு அழைப்பு
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் உண்ணாவிரதமிருக்கும் அவர்களது போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடக்கு, கிழக்கில் முழுமையான புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதோடு வியாழனன்று பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடத்தப்படவுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இயல்புநிலை தவிர்ப்புக்கான அழைப்பை விடுத்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் பூரணபுறக்கணிப்புக்கான அழைப்பை விடுத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் காந்தி பூங்கா முன்றலில் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதாக வும் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்திருப்பதாவது,
கடந்த காலங்களில் கைது செய்யப்பட் பல நூற்றுக் கணக்கான தமிழர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். யுத்தம் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் அவர்கள் விடுதலை செய்யப்படாது தொடர்ந்தும் சிறைகளில் வாடுகின்றனர். அவர்கள் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த மாதம் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்களது போராட்டத்திற்கு ஆதரவாக வடக்கு கிழக்கு எங்கும் போராட்டங்கள் நடைபெற்றன.
அதன் பலனாக அரசியல் கைதிகளை நவம்பர் 07இற்குள் விடுவிக்க முடியும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டு போராட்டத்தை கைவிடுமாறு கோரப்பட்டிருந்தது. எனினும் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிப்பதற்கு நடடிவக்கைகள் எடுக்கப்படாது தொடர்ந்தும் ஏமாற்றும் செயற்பாடுகள் நீடிக்கும் நிலையில் மீண்டும் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
ஆகவே அவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலும் விடுதலையை வலியுறுத்தும் முகமாகவும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடமாகாணத்தின் யாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் முழுமையான இயல்புநிலை தவிர்ப்பு போராட்டத்திற்கான அழைப்பை நாம் விடுத்துள்ளோம். குறித்த தினமன்று வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை மூடியும், போக்குவரத்துச் சேவைகளை நிறுத்தியும் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்வதுடன் அனைத்து தரப்பினரும் ஒன்றுதிரண்டு ஒத்துழைக்குமாறு அழைப்பு விடுக்கின்றோம் எனக்கோரியுள்ளது.
இதேவேளை விடுதலைகோரி சிறைச்சாலைகளில் மீண்டும் உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் வவுனியாவில் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
சகல வர்த்தக நிலையங்களையும், வங்கி உட்பட அரச மற்றும் தனியார் அலுவலகங்களையும் மூடி இந்த ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரப்பட்டுள்ளதுடன் பேரூந்துகள், முச்சக்கரணவண்டிகள், பொது சேவைகள் ஆகியவற்றின் சங்கங்களும் இதற்கு ஆதரவு வழங்க முன்வருமாறு தமிழத் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்திஆனந்தனின் தலைமையில் அவரது வவுனியா அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே மேற்கண்ட ஹர்த்தாலுக்கான இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி எதிர்வரும் வியாழக்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
சிறைக்கைதிகளின் உண்ணாவிரதப்போராட்டம், அவர்களின் விடுதலை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் நேற்றைய தினம் கூடி ஆராய்ந்திருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றிருந்தது.
இக்கூட்டத்தின்போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் அவர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்றையும் கையளிக்கவுள்ளதாகவும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அரசாங்கம் உரிய நடவடிக்கையெடுக்க தவறும்பட்சத்தில் கைதிகளுக்கு ஆதரவாக மக்கள் பிரதிநிதிகள் சுழற்சி முறையான உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.