"தமிழர் வாழ்வில் ஒளிபிறந்த நாளாக தீபாவளி அமையட்டும்" - வடமாகாண முதல்வர்
தமிழர்களது வாழ்வில் ஒளிபிறக்கக் கூடிய ஓர் நாளாக இத் தீபாவளி நாள் மலரவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தீபாவளித் திருநாளையிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதா வது,
தீபாவளி என்பது இருள் நீங்கி ஒளிபரவுகின்ற நாளேயாகும். அந்தவகையில் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது போல் எமது பழைய இருள் நிறைந்த வாழ்க்கை கடந்து புதிய ஒளி நிறைந்த வாழ்க்கை அமையவேண்டும் என்பதே அதன் அர்த்தம்.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் பற்றி பார்ப்போமாக இருந்தால் அவர்களில் பல சகோதர, சகோதரிகள் இன்னமும் இருள் நிறைந்த வாழ்க்கையிலே இருக்கின்றனர் என்பதே யதார்த்தம்.
அவர்களுக்கு இத் தீபாவளியானது தொடர்ந்தும் இருள் நிறைந்ததாக இருக்காமல் ஒளி நிறைந்ததாக மாறவேண்டும் என்பதே எமது கரிசனையும் பிரார்த்தனையும். குறிப்பாக சிறையில் வாடுபவர்களில் சிலரை விடுவிப்பதாகவும் மற்றவர்களை விடுவிக்க முடியாது என்றும் அவர்கள் சம்பந்தமாக பேசப்படும் என்றெல்லாம் குறிப்பிடப்படுகின்றது.
இதிலே முக்கியமான விடயம் என்னவென்றால் இத்தனை வருட காலமாக இவர்களது விடுதலை பற்றி பேசாது இருந்துவிட்டு அவர்கள் உண்ணாவிரதம் இருந்த பிறகு ஓர் தினத்தை கொடுத்து அதனிடையே சில நடவடிக்கைகள் எடுப்பதாகக் கூறிவிட்டு இன்னமும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இவ்வாறான நிலையில் சிறைக்கைதிகள் மீண்டும் உண்ணாவிரதம் இருக்க எண்ணியுள்ளனர். அத்துடன் ஒரு சிலருக்கு விடுதலை அல்லது பிணையை கொடுத்துவிட்டு மற்றவர்களை தொடர்ந்தும் இருள் வாழ்க்கையில் வைத்திருப்பதும் நல்லதல்ல.
இவர்களை விடவும் பலர் இருக்கின்றார்கள். இன்னமும் இருள் நிறைந்த வாழ்க்கையிலே தத்தளித்துக் கொண்டு. தமது தாய், தந்தை, சகோதரர்கள் எனப் பலரை காணாமல்போனவர்கள் என்ற சூழலில் அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் இருள் வாழ்க்கையிலே உள்ளனர். அத்துடன் உடமைகளை இழந்து மீண்டும் வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத இருள் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.
எனவே, இத் தீபாவளி நாளில் இருந்தாவது இருப்ப வர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து முடியுமான வரை உதவிசெய்து தமிழர்கள் வாழ்வில் ஒளி பரவக் கூடிய நாளாக இந்நாள் அமைய வேண்டும் என பிரார்த்திக்கின்றேன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.