சம்பந்தனுக்கு ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படாமையானது தமிழர்களை ஏமாற்றும் செயல்
தமிழ்அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் தலைவர் சம்பந்தனின் காதில் ஜனாதிபதி பூ வைக்கப்பார்க்கிறார். சம்பந்தன் இதுவிடயத்தில் தெளிவான ஒரு முடிவை அறிவிக்கவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் குறிப்பிட்டார்.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக அரியநேத்திரனிடம் கொழும்பு ஊடகம் ஒன்று வினாவியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள 14 சிறைகளிலுமுள்ள தமிழ் அரசியல்கைதிகள் தம்மை விடுதலைசெய்யக்கோரி கடந்த ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் சாகும்வரையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். அவர்களுக்கு ஆதரவாக வடகிழக்கிலும் அடையாள உண்ணாவிரத போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் கடந்த ஒக்டோபர் 17 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவுடன் நேரடியாக தொடர்புகொண்ட போது நவம்பர் 7 ஆம் திகதிக்கிடையில் அனைத்து தமிழ் அரசியல்கைதிகளையும் விடுவிப்பதாக ஜனாதிபதி எழுத்துமூலமான வாக்குறுதி வழங்கினார். அதனை நம்பிய சம்பந்தன் ஜனாதிபதியின் உறுதிமொழியை மகஸீன் சிறைக்கைதிகளிடம் நேரடியாக சென்று கூறியதை அடுத்து தற்காலிகமாக உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனால் ஜனாதிபதி, சம்பந்தனுக்கு கொடுத்த வாக்குறுதியை செயல்படுத்தவில்லை. பகுதி பகுதியாக அவர்களை பிணையில் விடுவிப்பதாகவும் புனர்வாழ்வு கொடுக்கவுள்ளதாகவும் அமைச்சர்களும் பிரதமரும் கதைத்து காலத்தை கடத்துவதையே தற்போதும் பார்க்கமுடிகிறது. உண்மையில் தமிழ் அரசியல் கைதிகளாக 217 மட்டுமே உள்ள நிலையில் இவர்களை விடுதலை செய்யக்கூடிய முழு அதிகாரம் ஜனாதிபதியின் கையில் உள்ளது. ஆனால் ஜனாதிபதி இந்த விடயத்தை இழுத்தடிப்பு செய்வதை காண முடிகின்றது.
ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன பதவியேற்று பத்து மாதமும் புதிய தேசிய அரசாங்கம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று மாதமும் கடந்துள்ள நிலையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல் இருப்பது நல்லாட்சியென கூறமுடியாது.
சம்பந்னுக்கு ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பதானது ஒட்டுமொத்த தமிழர்க ளையும் ஏமாற்றும் செயல் எனவும் கூறினார்.