கோத்தபாயவை கைதுசெய்யுங்கள்! - ஜே.வி.பி. கோரிக்கை
கடந்த ஆட்சியில் இலங்கையில் இடம்பெற்ற அனைத்து கடத்தல்கள், முக்கிய நபர்களின் கொலைகள் மற்றும் பாரிய நிதி ஊழல் மோசடிகள் அனைத்தின் பின்னணியிலும் உள்ள முக்கிய குற்றவாளி கோத்தபாய ராஜபக்ஷவேயாவார் என்று மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட் டியுள்ளது.
கடந்த காலங்களில் மூடிமறைக்கப்பட்ட மிகமோசமான குற்றச்சாட்டுகளை கண்டறிய உடனடியாக கோத்தாபயவை கைதுசெய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியினால் நேற்று கொழும்பில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
கடந்த காலங்களில் இலங்கையில் இடம்பெற்ற முக்கிய கடத்தல்கள் மற்றும் லலித் குகன் காணாமல் செய்யப்பட்டமை தொடர்பில் தகவல்களை நாம் வழங்கியதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
அதேபோல் 2012ஆம் ஆண்டு குமார் குணரத்னம் தங்கியிருந்த இடம் உள்ளிட்ட இரகசிய விடயங்கள் தொடர்பில் நாம் தகவல்களை வழங்கியதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவ்வாண்டு குமார் குணரத்னம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சிடம் முழுமையான தகவல்கள் இருந்தது. அது தொடர்பில் ஆவணம் எம்மிடம் உள்ளது. அதேபோல் நாம் தான் அந்த தகவல்களை வழங்கினோம் என குறிப்பிடுவது உண்மையாயின் ஏன் அதை அப்போதே தெரிவிக்கவில்லை.
அதேபோல் அப்போது அவர் தொடர்பில் தகவல்களை அரசாங்கமே வழங்கியதற்கான சாட்சியங்கள் உள்ளன. அவ்வாறு இருக்கையில் நாம் புதிதாக தகவல்களை வழங்கவேண்டிய தேவையும் இல்லை. மேலும் அவர் தொடர்பில் தகவல்களை வெளியிடும் அளவிற்கு அவர் எம்முடன் தொடர்புபட்டவரும் இல்லை. ஆனால் அவ்வாண்டு குமார் குணரத்னம் கைதுசெய்யப்படவில்லை. அவர் அப்போதைய அரசாங்கத்தினால் கடத்தப்பட்டார்.
அதுவும் எந்தவித பொலிஸ் தலையீடும் இல்லாது பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தாபய ராஜபக் ஷவின் தனிப்பட்ட தலையீட்டின் மூலமாகவே இந்த கடத்தல் மேற்கொள்ளப்பட்டது. குமார் குணரத்னம் கைதுசெய்யப்படவில்லை. பொலிஸார் அவரை கைது செய்யவில்லை, அவரது வாக்குமூலம் பெறப்படவும் இல்லை. அவ்வாறு இருக்கையில் இது எவ்வாறு கைதாகும்.
மேலும் அவர் கடத்தப்பட்டு சிலமணிநேரங்கள் கடந்து அவர் அனாதரவாக ஓர்இடத்தில் இறக்கி விடப்பட்டார். அதன் பின்னர் அவராகவே குற்றப்புலனாய்வு பொலிஸ் பிரிவினரை நாடியுள்ளார். அவர் அங்கு வருகின்றார் என்ற செய்தியை அறிந்துகொண்டு அவுஸ்திரேலிய தூதுவர் அவருடைய கடவுச் சீட்டுடன் வந்து அவரை அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தியுள்ளார். இதுதான் அப்போது நடந்த உண்மைகளாகும்.
அதேபோல் கடந்த 2012ஆம் ஆண்டு நாடுகடத்தப்பட்ட குமார் குணரத்னம் மீண்டும் இவ்வாண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நாட்டிற்கு எவ்வாறு வந்தார். அவரது கடவுச்சீட்டு தடைசெய்யப்பட்டிருந்தும் அவருக்கு யார் அனுமதி வழங்கியது. ஆகவே முன்னைய அரசாங்கத்தின் முக்கிய நபர்களுடன் அவருக்கு நேரடி தொடர்பு உள்ளது. அவர்களின் மூலமாக தான் அவர் இலங்கைக்கு வந்திருக்க வேண்டும். ஆகவே இப்போது அவருக்கு நல்லதொரு வாய்ப்பு உள்ளது. தாம் கடத்தப்பட்டமை தொடர்பில் முறையான வழக்கு தாக்கல் செய்து குற்றவாளிகளை கண்டறிய வேண்டும். அதற்கு இவர்கள் முன்வர வேண்டும்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய தெரிவித்திருக்கும் கருத்தின் அடிப்படையில் ஒரு முக்கிய உண்மை வெளிவந்துள்ளது. அதாவது தான் குணரட்ணத்தை கடத்தியதை அவரது வாக்குமூலமே வெளிப்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மட்டுமல்ல கடந்த அரசாங்கத்தின் ஆட்சியின் போது இலங்கையில் இடம்பெற்ற அனைத்து கடத்தல்களுடனும் கோத்தாபயவே தொடர்புபட்டுள்ளார். லலித், குகன் உள்ளிட்ட வடக்கில் இருந்த முக்கிய நபர்கள், அரசியல்வாதிகள் , ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டமை தொடர்பிலும் தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் மற்றும் முக்கிய வியாபார நபர்கள் அனைவரும் கடத்தப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் முக்கிய நபர் கோத்தாபய ராஜபக் ஷவேயாவார்.
கடந்த காலங்களில் காணாமல்போனோர் , கொலைசெய்யப்பட்டோர் மற்றும் கடந்த ஆட்சியில் நடைபெற்ற பாரிய நிதி ஊழல் மோசடிகள் அனைத்தின் பின்னணியிலும் உள்ள முக்கிய குற்றவாளி இவரேயாவார். ஆகவே உடனடியாக கோத்தாபய ராஜபக் ஷவை கைதுசெய்து இந்த உண்மைகளை கண்டறிய வேண்டும். சாதாரண குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை நிரபராதியென காட்டாது கடந்த காலங்களில் மூடி மறைக்கப்பட்ட மிகமோசமான குற்றச்சாட்டுகளை கவனத்தில் கொண்டு அவரை தண்டிக்க வேண்டும்.
ஆகவே இப்போது அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது. இந்த உண்மைகளை கண்டறிந்து கடத்தப்பட்டவர்கள் என்னவானார்கள் எங்கு இருக்கின்றனர் என்ற உண்மையை கண்டறிய உடனடியாக கோத்தாபய ராஜபக் ஷவை கைதுசெய்யப் போகின்றனரா அல்லது ஏதாவது ஒப்பந்தங்களை செய்துகொண்டு அவரை காப்பற்றி நாட்டின் ஜனநாயகத்தை மீண்டும் அழிக்கப் போகின்றனரா என்பதை தீர்மானிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.