ஐ.நா.விற்கு எதிராக இலங்கையில் வழக்குத் தொடர முடியாது!
ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராக இலங்கை நீதிமன்றில் வழக்குத் தொடர முடியாது என வெளிவிவகார அமைச்சிற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி ஐ.நா.வினால் வெளியிடப்பட்டுள்ள தருஸ்மான் அறிக்கை உள்ளிட்ட சர்வதேச விசாரணைக்கான பரிந்துரைகள் அனைத்தும் சட்டவிரோதமானவை என அறிவிக்குமாறு கோரி தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்தது.
அந்த அமைப்பின் இணைப்பாளர் டொக்டர் குணதாஸ அமரசேகர இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இராஜதந்திர வரப்பிரசாத சட்டதிட்டங்களுக்கு அமைய ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராக வடக்குத் தொடர முடியாது என இந்த மனு குறித்து வெளிவிவகார அமைச்சு எழுத்துமூலம் விளக்கமளித்துள்ளது.
இதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்யுமாறு வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது.எனினும், அரசாங்கத்தரப்பு வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கபில கமகே நீதிமன்றில் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையினால் இலங்கை குறித்து மேற்கொள்ளப்படும் விசாரணைகள் அனைத்தும் அந்த அமைப்பிற்குள்ள அதிகாரத்திற்கு அப்பாற்பட்டவை எனவும் சட்டத்தரணி மேலும் குறிப்பிட்டார்.
இதுகுறித்து ஆராய்ந்த நீதிமன்றம், குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா? இல்லையா? என்பது குறித்து ஆராய்ந்து டிசம்பர் 08ஆம் திகதி அறிவிப்பதாக தெரிவித்தார்.