வட, கிழக்கில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளில் தாமதமாம்
வடக்கு கிழக்கில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் மந்த கதியில் இடம்பெற்று வருவதாக நிலக்கண்ணி வெடிகளை தடை செய்யும் இலங்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் தற்போது மந்த கதியில் இடம்பெற்று வருவதாகவும், நிலக்கண்ணி வெடி அகற்றும் சர்வதேச பிரகடனத்தில் கையொப்பமிட்டு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என அமைப்பின் இணைப்பாளர் வித்தியா அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நிலக்கண்ணி வெடி அகற்றும் சர்வதேச பிரகடனத்தில் இலங்கை இன்னமும் கைச்சாத்திடவில்லை. இதன் காரணமாகவே இலங்கைக்கு நிலக்கண்ணி வெடி அகற்றுதல் தொடர்பில் போதியளவு சர்வதேச ஆதரவு கிடைப்பதில்லை.
எதிர்வரும் 30ம் திகதி ஜெனீவாவில் நடைபெறவுள்ள நிலக்கண்ணி வெடி அகற்றும் மாநாட்டில் பங்கேற்று இலங்கை இந்த பிரகடனத்தில் கையொப்பமிட முடியும்.
கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களின் சில பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகள் முழுமையாக மீட்கப்படவில்லை.
இதனால் 15000 குடும்பங்கள் வரையில் சொந்த இடங்களில் மீள்குடியேற முடியாத நிலைமை காணப்படுகின்றது.
நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளில் 10க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்களிப்பு வழங்கி வந்தன. எனினும், தற்போது அந்த நிறுவனங்களின் எண்ணிக்கை மூன்றாக குறைவடைந்துள்ளது என அபேகுணவர்தன அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.