Breaking News

மியன்மார் நிலச்சரிவில் சிக்கிய 104 பேரின் சடலங்கள் கண்டெடுப்பு

வடக்கு மியன்மாரின் காசின் மாநிலத்தில் உள்ள பச்சைக் கல் சுரங்கத்திற்கு அருகில் ஏற்பட்ட நிலச்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தோரின் 104 சடலங்கள் இதுவரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

மேலும், இந்த நிலச்சரிவில் புதையுண்டு 100 க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மியன்மாரின் காசின் மாநிலத்தில் உள்ள உலகில் அதிக விலையுயர்ந்த பச்சைக் கல் சுரங்கத்தில் பச்சைக் கற்களைத் தேடும் பணியில் குறித்த பணியாளர்கள் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.இந்தச் சுரங்கத்தின் கழிவுப் பொருட்கள் கொட்டப்பட்டிருந்த இடத்திலேயே இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. ஆயினும் இத்தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இதன் போது சுரங்கத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த பெரும்பாலான குடிசைகளும் மண்ணுள் புதையுண்டுள்ளதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

ஆயினும் இந்த நிலச் சரிவு எந்த மலையை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்டது என்பது தொடர்பான விபரங்கள் எதுவும் இதுவரையில் தெளிவுபடுத்தப்படவில்லை.மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதால், மேலும் பல சடலங்கள் இன்று கண்டுபிடிக்கப்படலாம் என நம்பப்படுகின்றது.