10 இலட்சம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதே அரசின் நோக்கம் : நிதி அமைச்சர்
நல்லாட்சி அரசாங்கத்தின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று சமர்ப்பித்துள்ளார்.
நாடாளுமன்றம் சபாநாயகரால் கரு ஜயசூரிய தலைமையில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகியது.வரவு - செலவுத்திட்ட அறிக்கையின் முதலாவது வாசிப்பை அமைச்சர் ரவி கருணாநாயக்க சபையில் சமர்ப்பித்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் உட்பட அரச தரப்பு எதிர்தரப்பு உறுப்பினர்கள் அனைவரும் சபைக்கு சமூகமளித்திருந்தனர்.இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வருகைத்தரவில்லை. ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளித்திருந்தனர்.
விவசாயத்தை முன்னேற்றுவதோடு, எதிர்கால தலைமுறையினருக்கான சிறந்த பொருளாதாரத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.மேலும் 10 இலட்சம் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 10 வருடங்களாக மக்களின் தேவைகளை அறிந்துகொள்வதில் ஆட்சியில் இருந்த அரசாங்கம் அக்கறை செலுத்தவில்லை எனவும், எனினும் 10 மாதங்களில் நாட்டில் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக கடந்த அரசாங்கம் அதிக வட்டவீதங்களுக்கு கடன்களை பெற்றுக்கொண்டதாகவும்இ வீதி அபிவிருத்தி பணிகளுக்காக கூடுதலான கடன்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.கடந்த 10 வருடங்களாக ஆட்சியில் இருந்த அரசாங்கம் வரி அறவீட்டில் தோல்வியை சந்தித்துள்ளதாக அவர் நிதியமைச்சர் கூறினார்.நாட்டின் கடன் தொகையானது மொத்த ஏற்றுமதி வருமானத்தில் 72%ஆக உள்ளதாக அவர் கூறினார்.