Breaking News

தடுத்து வைத்த குடிவரவு அதிகாரிகளை திட்டித் தீர்த்த விமல் வீரவன்ச!

செல்லுபடியற்ற கடவுச்சீட்டு மூலம் வெளிநாழுடு செல்ல முயன்ற போது நேற்று விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, குடிவரவு அதிகாரிகளைக் திட்டியுள்ளார். 

அவரது பயத்தைத் தொடர அனுமதிக்குமாறும், நாடு திரும்பிய பின்னர் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த பணிப்புரையை அலட்சியம் செய்த குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள், விமல் வீரவன்சவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைத்திருந்தனர்.

அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட விமல் வீரவன்ச, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டபோது விமல் வீரவன்ச நாகரிகமற்ற வகையில் நடந்து கொண்டதாக அதிகாரியொருவர் ஆங்கில ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். குடிவரவு அதிகாரிகளை கெட்ட வார்த்தைகளால் கடுமையாக அர்ச்சித்த விமல் வீரவன்ச, பண்பற்ற முறையில் நடந்து கொண்டு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்புக் கொடுக்க மறுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே, தற்போதைய அரசாங்கத்தின் மக்கள் விரோதப் போக்கு குறித்த குட்டு வெளிப்பட்டு விடும் என்பதாலேயே தனது பயணத்தைத் தடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்று விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பொலிசாரினால் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக விமல் வீரவன்ச, தொலைபேசி ஊடாக சிங்கள பத்திரிகையொன்றுக்கு செவ்வியொன்றை வழங்கியிருந்தார். குறித்த செவ்வியில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ள அவர், நான் அண்மைக்காலமாக பயன்படுத்திய எனது ராஜதந்திர கடவுச்சீட்டு காணாமல் போய்விட்டது.

அது தொடர்பாக நான் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளேன். அதன் பின்னர் என் கையில் இருந்த பழைய பாஸ்போர்ட்டுக்கே நான் செல்ல வேண்டிய நாடுகளுக்கான வீசா பெற்றுள்ளேன். எனினும் அதனை ஏற்றுக் கொள்ளமுடியாது என்றும், புதிதாக வேறொரு பாஸ்போர்ட் பெற்றுக் கொண்டால் மாத்திரமே எனது பயணத்தைத் தொடர அனுமதிக்க முடியும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தார்கள். 

அதற்கேற்ப நானும் புதிதாக பாஸ்போர்ட் பெற்றுக் கொண்டு, விமானப்பயணத்துக்கு தயாராக வந்தால் பாஸ்போர்ட்டை பிரச்சினையாக்கி தடுத்து வைத்துள்ளார்கள். உண்மையில் அரசாங்கத்துக்கு எனது பாஸ்போர்ட் பிரச்சினையல்ல. எனது பயணத்தை தடுப்பதற்கு அவர்களுக்கு அது ஒரு காரணம் மட்டுமே. ஏனெனில் நான் சுமார் பத்து நாடுகளில் பல்வேறு இடங்களில் அரசாங்கத்தின் மக்கள் விரோத செயற்பாடுகள் குறித்து கருத்துரையாற்றவே செல்லவிருந்தேன்.அவ்வாறு சென்றிருந்தால் அரசாங்கத்தின் குட்டு வெளிப்பட்டுவிடும் என்ற பயம் காரணமாகவே அரசாங்கம் எனது பயணத்தைத் தடுத்துள்ளது என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.