போர்க்குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் இராணுவத்தினரின் கௌரவத்தை பாதுகாப்போம் – மைத்திரி உறுதி
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு முகம்கொடுக்கும், முப்படையினரின் கௌரவத்தையும் அபிமானத்தையும் பாதுகாக்கும் கடப்பாடு இலங்கை அரசாங்கத்திற்கு இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பனாகொட இராணுவ முகாமில் நேற்று, இலகு காலாற்படை படைப்பிரிவில் இருந்து உயிரிழந்த படையினரின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுச் சின்னத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு, எமது படையினரும் பாதுகாப்பு தரப்பினரும் முகம்கொடுக்கும் போது, அவர்களின் கௌரவத்தை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடப்பாடு ஆகும். எமது முப்படையினரையும் பாதுகாப்புத் தரப்பினரையும் பலவீனப்படுத்துவதற்கு எந்தவிதத்திலும் நான் இடமளிக்கமாட்டேன்.
புதிய அரசாங்கத்தின் கீழ் நாட்டில் சுதந்திரம் ஜனநாயகம் மற்றும் கருத்துச் சுதந்திரம் பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பல்வேறுபட்ட கொள்கைகளுடைய அரசியல் கட்சிகள் எந்தவிதமான கருத்துக்களை வெளியிட்டாலும் வீரம் மிக்க எமது படையினரின் கௌரவத்தையும், அபிமானத்தையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும்.
உலகின் ஒழுக்க மிக்க இராணுவமாக எமது படையினர் மதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாகவே ஐ.நா அமைதிப்படையில் எமது படையினரின் பங்களிப்புக்கு அதிகளவில் இடம் கிடைத்துள்ளது.” என்றும் தெரிவித்தார்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிற்கு பின்னர் பனாகொட இராணுவ முகாமில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற, முதலாவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆவார். இவர், நேற்றைய நிகழ்வின் போது, இராணுவத்தின் இலகு காலாற்படை படைப்பிரிவில்இருந்து மரணமான, 3868 படையினரை நினைவு கூர்ந்து, பனாகொட இராணுவத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள 80 அடி உயரமான நினைவுச் சின்னத்தையும் திறந்து வைத்தார்.
தெற்காசியாவில் அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான போர் நினைவுச் சின்னம் இதுவே என்று இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெற்றியாராச்சி, கூட்டுப்படைகளின் தளபதி எயர் சீவ் மார்ஷல் கோலித குணதிலக, இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வா, விமானப் படை தளபதி எயர் மார்ஷல் ககன் புலத் சிங்கள உள்ளிட்ட பாதுகாப்பு உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.