Breaking News

மாவீரர் தின நிகழ்வுகளுக்கு மைத்திரி அரசாங்கமும் கடும் எதிர்ப்பு - பாதுகாப்பு செயலாளர்

நாட்டின் எப்பாகத்திலும் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் இடம்பெற மாட்டாது
என்றும் அந்த நிகழ்வுகள் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாதெனவும் பாதுகாப்பு செயலாளர் அறிவித்தல் விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் ஊடாக தற்போது சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதனை முறையாக பயன்படுத்தி விழாக்களையோ அல்லது கொண்டாட்டங்களையோ முன்னெடுக்கலாம். ஆனால் அந்த சுதந்திரத்தை தவறான முறையில் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என குறிப்பிட்டார். 

கடந்த அரசிலும் மாவீரர் தின நினைவுகூரல்களுக்கு எதிர்பு தெரிவிக்கப்பட்டதுடன் பல கெடுபிடிகளும் இடம்பெற்றதை அறிந்துள்ள மக்கள் அவ்வாறானதோர் நிலைக்கு புதிய அரசை இட்டுச்செல்ல வேண்டாமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார். 

சட்டவிரோதமான முறையில் நடாத்தப்படும் இவ் விழாக்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதாக சுட்டிக்காட்டினார். புலனாய்வு துறையினரிடமிருந்து தனக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி வடக்கில் நவம்பர் 14ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் ஞாபகார்த்த வைபவங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போதைய புதிய அரசின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, மாவீரர் தினக் கொண்டாட்டங்களை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.