யுத்தக் குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் இல்லை! ஐ.நா.தீர்மானத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு
யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கையில் நடைபெறவுள்ள விசாரணையின்போது வெளிநாட்டு நீதிபதிகள் வழக்குகளை விசாரணை செய்து நீதி வழங்கும் செயற்பாட்டில் ஒருபோதும் ஈடுபடமாட்டார்கள் என மின்வலு எரிசக்தி பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் அனுசரணையுடன் நிறைவேற்றபட்டுள்ள பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள விசாரணை பொறிமுறை பற்றி தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பிரேரணையின் பிரகாரம் அது தொடர்பிலான எழுத்துமூல அறிக்கை 32 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க வேண்டும். அதேவேளை, 34 ஆவது கூட்டத் தொடரில் முழு அளவிலான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளது.
கலப்பு விசாரணை பற்றி பிரதியமைச்சர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின் பிரகாரம் எமது நாட்டின் சுயாதிபத்தியம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எமது நாட்டின் சுயாதிபத்தியத்தை ஏற்றுக்கொள்வதாக இருந்தால் இலங்கையின் அரசியலமைப்பையும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
மேலும் பேரவையின் தீர்மானத்தில் இலங்கை பாராளுமன்றம் இயற்றுகின்ற சட்டத்திற்கிணங்கவே விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, வெளி நாட்டு நீதிபதிகள் வழக்குகளை விசாரணை செய்யும் வகையிலான சட்ட ஏற்பாடுகள் இலங்கை சட்டத்தில் இல்லை. அத்துடன் எமது நாட்டு அரசியலமைப்பிற்கிணங்க எமது நாட்டுப் பிரஜையொருவருக்கே நீதிபதியாக பதவி வகிக்கும் தத்துவம் உள்ளது.
எனவே, வெளிநாட்டு நீதிபதிகள் விசாரணை நடவடிக்கையின்போது தொழிநுட்ப ரீதியிலான விடயங்களிலேயே பங்களிக்கவுள்ளனர். வழக்குகளை விசாரணை செய்து நீதி வழங்கும் விடயத்தில் அவர்களால் ஒருபோதும் பங்களிக்க முடியாது. அதற்கு கீழுள்ள விடயங்களிலேயே அவர்களால் பங்களிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பாராளுமன்றில் 2/3 பெரும்பான்மையும் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்களின் அபிப்பிராயத்தையும் பெற வேண்டும் என அரசியல் கட்சிகள் சில வேண்டுகோள் விடுத்துள்ளன. இது தொடர்பிலான எழுத்துமூல கோரிக்கையினை ஜனாதிபதியிடம் குறித்த அரசில் கட்சிகள் முன்வைக்கவுள்ளதாகவும் தெரியவருகிறது.
இது குறித்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எதிர்வரும் இரு வாரங்களில் குறித்த கட்சிகள் தமது நிலைப்பாட்டினை ஜனாதிபதியிடம் அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜெனீவா தீர்மானத்தை விரிவாக ஆராய்வதற்கான சர்வகட்சி மாநாடு கடந்த வியாழக்கிழமை முதல் தடவையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடியது. மேலும் சர்வகட்சி மாநாட்டின் இரண்டாம் அமர்வு மூன்று வாரங்களின் பின்னர் மீண்டும் நடைபெறவுள்ளது.
எனவே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் பாராளுமன்றின் 2/3 பெரும்பான்மையையும் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி மக்களின் அபிப்பிராயத்தை கண்டறியுமாறு அரசியல் கட்சிகள் சில, ஜனாதிபதியிடம் சர்வகட்சி மாநாட்டின் இரண்டாம் அமர்வின்போது வலியுறுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.