Breaking News

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றால் - பா.ஜ.க. கூட்டணியை விட்டு வெளியேறத் தயார்!

ஜெனிவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் பங்கேற்று சென்னை திரும்பிய பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:- 

சமீபத்தில் ஜெனிவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் பசுமைத் தாயகம் சார்பில், நான், சமூகநீதி பேரவை தலைவர் வக்கீல் பாலு, பசுமை தாயகம் அமைப்பின் செயலாளர் அருள் ஆகியோர் கலந்துகொண்டு எங்கள் நிலைப்பாட்டை முன்வைத்தோம். 

அதாவது, இலங்கையில் நடந்த போர் குற்றம் குறித்து, குற்றவாளியான அந்த நாடே விசாரித்தால் எப்படி தண்டனை கிடைக்கும் என்பது குறித்தும், இதுதொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்தும் எடுத்துக் கூறினோம். இலங்கையில் நடந்த போர் குற்றம் குறித்து பன்னாட்டு நீதி விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தினோம். 

ஆனால், இந்த கூட்டத்தில் இந்திய அரசு பிரதிநிதிகள் பங்கேற்றும் எதுவும் பேசாமல் மௌனம் காத்தனர். நியாயமாக பார்த்தால், இந்த பிரச்சினையை இந்திய அரசு தான் முன்னெடுத்து செல்ல வேண்டும். ஆனால், இந்தியா மௌனம் காப்பதால் அமெரிக்கா முன்னெடுத்து செல்கிறது. 

தமிழக அரசும் சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றியதோடு கடமை முடிந்துவிட்டதாக எண்ணுகிறது. நாங்கள் மீண்டும் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், தமிழக அரசு இந்த பிரச்சினையை முன்னெடுத்து சென்று இந்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்திய அரசு பணியும். 

எனவே, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும். இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை மற்ற அமைப்புகளுடன் சேர்ந்து நாங்கள் போராடுவோம். 

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார். 

அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அன்புமணி ராமதாஸ் அளித்த பதில்களும் வருமாறு:- 

கேள்வி:- இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தனி ஈழம் தான் ஒரே தீர்வு என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளாரே?. 

பதில்:- இலங்கை தமிழர்களுக்கு என்ன வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும். 

கேள்வி:- அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தமிழக சட்டமன்றம் கூடும் முன்பே நீங்கள் வலியுறுத்தினீர்கள். ஆனால் கூட்டப்படவில்லை. ஏன் நீங்களே அந்த கூட்டத்தை கூட்டினால் என்ன?. 

பதில்:- அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட நான் தயார். ஆனால், அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டுமே. 

கேள்வி:- ஈழத்தமிழர் பிரச்சினையில் உண்மையாக குரல் கொடுப்பதாக இருந்தால், பா.ஜ.க. கூட்டணியை விட்டு பா.ம.க. வெளியே வர வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளாரே?. 

பதில்:- இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றால், பா.ஜ.க. கூட்டணியை விட்டு வெளியேற பா.ம.க. தயாராக இருக்கிறது.