நாங்கள் தமிழ் மக்களின் எதிரிகளல்லர்! மாறாக தமிழீழம் கோருகின்றவர்களையே எதிர்க்கின்றோம்
நாம் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. தமிழர் சமுதாயத்தில் சிங்கள மக்களைவிடவும் குணசீலர்கள் உள்ளனர் என்பதை எம்மால் மறுக்க முடியாது. ஆனால் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்றோம் என்ற போர்வையில் தமிழீழம் கோரி நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த முன்னிற்கும் தரப்பினருக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
நாட்டில் உள்ளக பொறிமுறை என்ற பெயரில் நிறுவப்படவுள்ள யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்யும் நீதிமன்றத்தின் நீதிபதிகள் குழுவுக்கு சம்பளம் மற்றும் நீதிமன்ற வளாகத்தை நிறுவுவதற்கான நிதி என்பவற்றையும் வழங்க நோர்வே அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழீழத்தின் வரைபடம் வன்னி, ஜெனிவா, நியூயோர்க் என்ற தலைப்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவினால் எழுதப்பட்ட நூல் கொழும்பு 7, ஹெக்டர் கொப்பேகடுவ கமநல மத்திய நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் வெளியிட்டு வைக்கப்பட் டது. இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, டலஸ் அழகப்பெரும, திஸ்ஸ விதாரண, உதய கம்மன்பில, முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா உள்ளிட்டோரும் தேசிய சுதந்திர முன்னணியின் மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் அவர் மேலும் உரையாற்று கையில், புலிகளுடன் சமாதான உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்ட போது முன்னாள் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகாவின் எதிர்ப்பினால் எமது நாட்டை அன்று காப்பாற்றிக்கொள்ள முடிந்தது.அது போன்ற திட்டங்கள் இன்றும் முன்னெடுக்கப்பட்டு நாட்டில் பிளவு ஏற்பட ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்பதற்காகவே நாம் புத்தகம் வாயிலாக நாட்டு மக்களை தெளிவுபடுத்த முயற்சிக்கின்றோம்.
நாம் இவ்வாறு எமது தேசியம் பற்றி பேசும் போது தமிழர் சமுதாயத்தில் நாம் இனவாதிகளாக சித்தரிக்கப்பட்டுள் ளோம். ஆனால் நாம் தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்லர். தமிழர் சமுதாயத்தில் சிங்களவர்களை விடவும் குணசீலர்கள் பலர் உள்ளனர் என்பதை நாம் மறுக்கவும் இல்லை.
ஆனால் தமிழ் மக்களுக்கு உரிமைக்குரல் கொடுப்பதாகவும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் கூறிக்கொண்டு தமிழீழம் என்ற நோக்கத்தில் பயணிப்பவர்களை நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. இவர்களின் தேவைக்காகவே சர்வதேசமும் செயற்படுகின்றது.
அதனால் நாட்டின் இராணுவத்தினர் மீது சுமத்தக்கூடிய அதிகபட்ச குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவர்களை நீதிமன்றம் வரையில் வரச்செய்துள்ளது. ஒரு நாட்டின் அரசாங்கம் தமது நாட்டை பாதுகாப்பதற்காக போராட்டம் நடத்துவதில் எவ்வித சட்டமீறலும் இல்லை. உலகளவில் யுத்த குற்றம் செய்துள்ள அமெரிக்கா எமது நாட்டை காப்பாற்ற போராடிய இராணுவத்தினரை தற்போது குற்றவாளிகளாக்க முயற்சித்துக்கொண்டிருக்கின்றது. தற்போதைய அரசாங்கமும் அதற்கு இணங்கிச் செயற்படுகின்றது.
சர்வதேச சக்திகள் இலங்கை இராணுவத்தின் திறனை ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தினாலேயே இவ்வாறு செயற்படுகின்றன. அதனை விளங்கிக்கொண்டதால் தான் ரவிநாத ஆரியசிங்க ஐ.நா. அறிக்கையை மீளாய்வு செய்யக் கோரினார். ஆனால் வெளிவிவகார அமைச்சர் அறிக் கையை ஏற்றுக்கொண்டுள்ளார். அரசாங்கமும் தற்போது இராணுவத்தினரை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
யுத்தத்தில் 7000 பேர் மட்டுமே இறந்துள்ளனர் என்று பரணகம அறிக்கை குறிப்பிடும் போது அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அரசாங்கம் சர்வதேச சக்திகள் 40000 பேர் யுத்தத்தால் இறந்துள்ளனர் என்று நாட்டின் மீது குற்றம் சுமத்தும்போது அதை ஏற்றுக்கொள்கின்றது. அதற்கமைய உள்ளக விசாரணை என்ற போர்வையில் சர்வதேச விசாரணை நடத்தவும் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் இதனை உள்ளக விசாரணை என்கிறது. ஆனால் குறித்த நீதிமன்றத்திற்கு சர்வதேசத்தில் உள்ள நீதிபதிகள் பங்கேற்பதால் அவர்களின் சம்பள தொகை மற்றும் நீதிமன்ற வளாகத்தை நிறுவுவதற்கான நிதி ஆகியவற்றை நோர்வே அரசாங்கம் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
தற்போதுள்ள சட்டங்களின் பிரகாரம் இராணுவத்தினரை குற்றவாளிகளாக அடையாளப்படுத்த முடியாதுள்ள நிலையில் எதிர்காலத்தில் அவர்களை குற்றவாளிகளாக்கும் வகையில் அரசாங்கம் சூட்சுமமாக சட்டதிட்டங்களை மாற்றியமைக்கும். அதற்கமைய தற்போது பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றையும் சர்வதேசம் நீக்கச் சொல்கிறது.
மறுபுறம் நாட்டில் மறைமுகமாக 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த முயற் சிக்கின்றது. மாகாண சபை அதிகாரத்தை பயன்படுத்தி பாரதூரமான செயற்பாடுகளை நாட்டில் முன்னெடுக்கும் போது அதனைக் கட்டுப்படுத்த அராசாங்கத்திற்கு பொது மக்கள் பாதுகாப்புச் சட்டம் அவசியப்படும். தற்போதைய அரசாங்கம் அதனை மறந்து செயற்படுகின்றது. அரசாங்கத்திற்கு சார்பாக தற்போது மக்கள் விடுதலை முன்னணியும் செயற்படுகின்றது. அதனால் தான் நாட்டில் உள்ள பிரச்சினைகளை துறந்து விட்டு மக்கள் விடுதலை முன்னணி ஊழல்களை தேடும் பணியில் ஈடுபடுகின்றது என்றார்.