அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கவனயீர்ப்பு போராட்டம் யாழில் ஆரம்பம்
நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அவர்கள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் யாழ்ப்பாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த கவனயீர்ப்பு போராட்டம் சற்று நேரத்திற்கு முன்னர், யாழ் கோட்டை முனியப்பர் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாணசபை உறுப்பினர், மதத் தலைவர்கள் உட்பட அரசியல் கைதிகளின் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது, ‘அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நியாயமானதே’, ‘சிறைவாழ்வுதான் தமிழருக்கு நிரந்தரமானதா?’, ‘அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுதலைச் செய்’, ‘அரசே! தாமதிக்காதே தாமதிக்காதே அரசியல் கைதிகளின் விடுதலையை தாமதிக்காதே’, ‘அரசே அரசியல் இரட்டை வேடத்தை நிறுத்து’, ‘சர்வதேசம் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அழுத்தம் கொடு’, போன்ற வசனங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் மேலம் பல அரசியல் தலைவர்களும், பொதுமக்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.