கூட்டமைப்பின் துரோகத்தனம் ஜெனீவாவில் -வலம்புரி
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில்
இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிறைந்த திருப்தியைக் கொடுத்திருக்கும்.
இலங்கை அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொழும்புத் தலைமையும் சேர்ந்து தீட்டிய திட்டம் வெற்றி பெற்று விட்டது.
ஈழத் தமிழர்களுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்த மிகமோசமான துரோகத்தனம் ஜெனிவாவில் நிறைவேறியது.
தமிழ் மக்களிடம் தங்களை நம்பிக்கைக்குரியவர்களாக நம்ப வைத்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எங்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் மிகப் பெளவியமாக சிதறடித்துவிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சதியை தமிழ் மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.
தமிழ் மக்களின் சார்பில் ஜெனிவாவுக்குச் செல்வதாகக் காட்டாப்புக் காட்டி; அமெரிக்காவின் பிரேரணையை வரவேற்பதாக அறிக்கை விட்டு; சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என்று மோசமான சூழ்ச்சி செய்து; இலங்கையில் இன அழிப்பு நடக்கவே இல்லையென்று கருத்துரைத்து ஈழத்தமிழர்களுக்கு கொள்ளி வைத்த சதியை கடவுள் கேட்டால் மட்டுமே உண்டு.
வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இந்த நாட்டின் நீதியரசராக இருந்தவர். நிறைந்த ஆன்மிகவாதி. கடந்த தேர்தலின் போது, அன்பார்ந்த தமிழ் மக்களே! விலைபோன அரசியல்வாதிகளுக்கு வாக்களித்துவிடாதீர்கள் என்று பகிரங்கமாகக் கேட்டார்.
நேர்மையான அரசியல்வாதிகளுக்கு உங்கள் வாக்கை வழங்குங்கள் என்று துணிந்து கூறினார்.
ஆனால் எங்கள் மக்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிக் கொட்டினர்.
அண்மையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய வடக்கின் முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன் மீண்டும் கூறியது, தமிழ் அரசியல்வாதிகளில் சிலர் விலைபோய் விட்டனர் என்பதுதான்.
தமிழ் மக்களின் ஓர் உன்னதமான கல்விக் கலாபீடத்தின் மத்தியில் நின்று கொண்டு, அன்புக்குரிய தமிழ் மக்களே! விலைபோகாத அரசியல் தலைமையை உருவாக்குங்கள் என்று முதலமைச்சர் விடுத்த அறைகூவலில் இருந்து தமிழர்களின் கொழும்பு அரசியல் தலைமை என்ன செய்தது என்பது தெரிகிறதல்லவா?
ஆம், முதலமைச்சர் கூறியதன் உண்மைக்கு தக்க சாட்சியம் ஜெனிவாவில் நடந்ததுதான். எங்கள் இனத்திற்கு மண் போட்டதில் இருந்து உணர முடிகிறதல்லவா?
என்ன செய்வது? எங்களுக்கு நாங்களே பகையாகிவிட்டோம். இனி 2016இல் தீர்வு என்று நம்மவர்கள் சொல்வார்கள். அதையும் நாம் நம்புவோம்.
மாணவி வித்தியாவின் படுகொலைக்கு வீறு கொண்டு எழுந்த இனம் ஒட்டுமொத்தத் தமிழினத் திற்கும் ஜெனிவாவில் வைத்து அக்கினி மூட்டியது கண்டு பேசாதிருப்பது ஏன்?
இதைத்தான் ஊழ்வினை என்று உரைப்பதோ!
தொடர்புடைய கட்டுரைகள்
தொடர்புடைய கட்டுரைகள்