பொதுமன்னிப்பு நிராகரிக்கப்பட்டமைக்கு உயரதிகாரி ஒருவரே காரணம் கூறுகிறார் விஜயகலா
தமிழ் அரசியல் கைதிகளுக்கான பொதுமன்னிப்பு நிராகரிக்கப்பட்டமைக்கு சட்டமா அதிபர் திணைக்கள உயரதிகாரி
ஒருவரே காரணம் என்று மகளிர் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கு அரசாங்கம் மனதாயிருக்கின்ற போதிலும், அவ்வாறு விடுதலை செய்தால் தென்னிலங்கையில் கிளர்ச்சி ஏற்படும் என்ற அச்சத்தை குறித்த உயரதிகாரி முன்வைத்து வருவதாக பிரதியமைச்சர் தெரிவித்தார்.
இதன் காரணமாக அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் மாற்றிக் கொண்டு, பிணை வழங்கும் தீர்மானத்தை எடுத்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.
கடந்த நாடாளுமன்ற அமர்வின்போது அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்சவுடன் தாம் பேசியதாக தெரிவித்த பிரதியமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், கைதிகளை விடுவிப்பதற்கு அரசாங்க தரப்பில் ஆட்சேபனை இல்லை என்று பதிலளித்ததாக குறிப்பிட்டார்.
எனினும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கே இதற்கான முழு அதிகாரமும் உள்ளதென நீதியமைச்சர் தெரிவித்ததாகவும், அதனால் அரசாங்கத்திற்கு தனித்து இந்த விவகாரத்தில் முடிவு காண முடியாது என்றும் குறிப்பிட்டதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிக்கும்வரை எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று தெரிவித்துள்ள கொழும்பு புதுக்கடை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 14 தமிழ் அரசியல் கைதிகளின் பிணை கோரிக்கையை நேற்று நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.