Breaking News

2016ஆம் ஆண்டுக்குள் தீர்வு கிடைத்து விடுமா

இனப்பிரச்சினைக்கான தீர்வு 2016ஆம் ஆண் டின் இறுதிக்குள் கிடைத்துவிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பொதுத் தேர்தல் காலத்தில் தெரிவித்திருந்தார்.

2016ஆம் ஆண்டின் இறுதிக்குள் தீர்வு கிடைத்து விடும் என்று உறுதியாக சம்பந்தன் எவ்வாறு தெரிவித்தார் என்பதற்கு ஆதாரம் ஏதும் உண்டா? என்று கேட்டால், அந்த ஆதாரங்கள் இரா.சம்பந்தரிடமே இருக்க முடியும். அதேசமயம் பொதுத் தேர்தலில் வெல்வதற்காக சம்பந்தர் பொய்யான ஒரு பிரசாரத்தை செய்திருக்க மாட்டார் என்றே தமிழ் மக்கள் கருதுகின்றனர்.

2016ஆம் ஆண்டுக்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்ற உத்தரவாதத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வழங்கியிருந்தால் மட்டுமே சம்பந்தரால் உறுதிபடக் கூறியிருக்க முடியும். இருந்தும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இருந்து நாட்டைக் காப்பாறிக் கொள்வதற்காக, சம்பந்தருக்கு அப்படி ஒரு உறுதிமொழி அரச தரப்பால் வழங்கப் பட்டிருக்கலாம்.

அதேநேரம் எதிர்க்கட்சித் தலைமைப் பதவியும் அதற்கான ஒரு சன்மானம் என்பதை அடியோடு நிராகரிக்க முடியாது. எதிர்க்கட்சி வரிசையில் இருக்கக்கூடிய 56 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு குமார் வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமியுங்கள் என்று சபாநாயகரிடம் மனுசமர்ப்பித்த போது எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை அவர்களுக்கு வழங்குவதே பொருத்துடையது.

ஆனால் அவ்வாறு வழங்காமல் இரா.சம்பந்தருக்கு எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை வழங்கியதற்குள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உச்சமான இராஜதந்திரம் இருப்பதைக் கண்டறிய முடியும்.

தமிழர்களின் விடுதலைப் போராட்டம் எங்ஙனம் உடைக்கப்பட்டதோ அதுபோல தமிழ் அரசியல் தலைமைக்கு பதவியைக் காட்டி சர்வதேச விசாரணையில் இருந்து இலங்கை காப்பாற்றப்பட்டது.

இப்போது ஐ.நா தீர்மானம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பெரும் விவாதங்கள் நடக்கின்றன. கூடவே காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு சமர்ப்பித்த அறிக்கை பற்றிய விவாதங்களும் சூடுபறக்கத் தொடங்கி விட்டது.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் செங்கோலைத் தூக்கிக் கொண்டோடியுள்ளார். செங்கோல் ஆட்சி இல்லாத இடத்தில் செங்கோல் எதற்கு என்ற நிலையிலும் அந்த உத்தமப் பெருமகன் செங்கோலைத் தூக்கிச் சென்றிருக்கலாம்.

இவை எல்லாம் பாராளுமன்றத்தில் நடத்தப்படுவது உலகத்திற்கு ஒரு நாடகம் காட்டுவதற்காகவே. தமிழ் மக்களின் வாக்குகளால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்ற பின்பு பதவிக்காக கொண்ட கொள்கைகளை விட்டுக் கொடுக்கின்ற தமிழ் அரசியல் தலைமையை எப்படியும் ஏமாற்றலாம். ஏமாற்றவேண்டும் என்ற அடிப்படையிலேயே அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல தமிழினத்திற்கு எதிரான அனைத்து விடயங்களிலும் அனைத்து ஆட்சியாளர்களும் ஒன்றுபட்டு செயற்படுகின்றனர்.

வெளியில் மட்டும் எதிர்ப்புக் காட்டுவது போல பாசாங்கு செய்யப்படுகிறது. எதுவாயினும் தமிழ் மக்களுக்கான தீர்வு என்பதை 2016இற்குள் அடையத் தவறினால், தமிழ் மக்களுக்கு எதுவுமே கிடையாது என்பது நிறுதிட்டமான உண்மை.

ஆகையால் பதவிக்கும் பணத்திற்கும் விலை போகாமல் தமிழ் மக்களுக்கான தீர்வில் தமிழ் அரசியல் தலைமைகள் விடாப்பிடியாக நிற்க வேண்டும். இல்லையேல் அனைத்தும் அம் போதான்.

-வலம்புரி-