மின்சாரக் கதிரைக்கும் "ஹைபிரிட்" விசாரணைக்கும் முற்றுப்புள்ளி-ஜனாதிபதி
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மற்றும் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் பிரேரணை உள்ளக விசாரணை பொறிமுறை தொடர்பாக விரைவில் சர்வகட்சி
மாநாட்டை கூட்டி கலந்துரையாடவுள்ளதாக ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தார்.
மாநாட்டை கூட்டி கலந்துரையாடவுள்ளதாக ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தார்.
மின்சாரக் கதிரைக்கும் "ஹைபிரிட்" விசாரணைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட உள்ளக விசாரணைக்கு இன்று வித்திடப்பட்டுள்ளது.
புலம்பெயர் ஈழ வாதிகளது 37 அமைப்புக்களின் சர்வதேச விசாரணைக்கான வலியுறுத்தலை அரசாங்கம் தகர்த்துள்ளது. அதற்காக பிரதமருக்கும் அமைச்சரவைக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
ஐ.நா.வின் 70 ஆவது வருடாந்த பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு நேற்று வெள்ளிக்கிழமை நாடு திரும்பிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்றிரவு நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
இரவு 7.15 ஆரம்பித்த ஜனாதிபதியின் உரை இரவு 8.15 மணியளவில் நிறைவு பெற்றது. இந்த ஊடகவியலளார் மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான நிமல் சிறிபால டி. சில்வா, ஜோன் செனவிரத்ன, மஹிந்த சமரசிங்க, எஸ்.பி. திஸாநாயக, துமிந்த திஸாநாயக, அர்ஜுன ரணதுங்க, அநுரபிரியதர்ஷன யாப்பா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ஐ.நா. அறிக்கை மற்றும் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் பிரேரணை மற்றும் உள்ளக விசாரணை என்பன தொடர்பில் தனித்து எந்தவிதமான தீர்மானத்தையும் நான் மேற்கொள்ள மாட்டேன். பிரதமர் மற்றும் அமைச்சரவையுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியே தீர்மானம் எடுப்பேன்.
அதுமட்டுமல்லாது சில தினங்களில் சர்வகட்சி மாநாட்டைக் கூட்டி அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி இந்த விடயங்கள் குறித்து ஆலோசனைகளை பெற்றுக் கொள்வேன்.
மேலும் விரைவில் பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ என அனைத்து மதத்தினரையும் சார்ந்த மாநாட்டை நடத்துவுள்ளதுடன் அவர்களது ஆலேசனைகளை பெற்றுக் கொள்வேன்.
நாட்டுக்குள்ளும் வெளிநாடுகளிலும் வாழும் இலங்கையின் கல்விமான்களை அழைத்து கலந்துரையாடல்களை நடத்தவும், ஆலேசனைகளை பெறவும் உத்தேசித்துள்ளேன்.
சில அடிப்படை வாதிகளும், இனவாதிகளும், பெய்யான தேசப்பற்றாளர்களும் அரசியல் தலைவர்கள் சிலர் மின்சாரக் கதிரைக்கு போக நேரிடும் என்றும் நான் அமெரிக்காவின் பகடைக்காய் என்றும், இந்த ஆட்சி அமெரிக்காவின் சூழ்ச்சியால் அதிகாரத்தை பிடித்த ஆட்சி என்றும் பிரச்சாரம் செய்தனர். ஆனால் நாம் யார் என்ற உண்மையை வெகுவிரைவில் எதிர்காலத்தல் வெளிப்படுத்துவோம்.
ஐ.நா. அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட ஹைபிரிட்டை (கலப்பு நீதிமன்ற விசாரணை) இறுதிக்கட்ட ஜெனிவா பிரேரணையில் நாங்கள் இல்லாமல் செய்தோம். எந்த சந்தர்ப்பத்திலும் விசாரணைகளில் சர்வதேசத் தலையீடு இருக்கப் போவதில்லை.
இலங்கையின் அரசியல் அமைப்பு மற்றும் சட்டவரையரைக்குள் நாட்டினதும் மக்களினதும் இறையான்மை மீறப்படாத வகையில் விசாரணைகள் நடத்தப்படும். அனைத்து செயற்பாடுகளும் இலங்கையின் சட்டவரையரைக்குள் உட்பட்டதாக இருக்கும்.
யுத்தம் முடிந்தபின்னர் கடந்த ஐந்து வருடங்காளக சர்வதேசம் எமக்கெதிராகவே செயற்பாடுகளை முன்னெடுத்தது.இலங்கைக்கு ஐ.நா.விலோ, சர்வதேச ரீதியிலோ ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.
பிரபாகரனையும், விடுதலைப்புலிகள் அமைப்பையும், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும் யுத்தத்தை வெற்றிக் கொள்ளவும் இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகள் எமக்கு உதவி செய்தன. யுத்தம் முடிந்த பின்னர் இந்த நாடுகள் எமக்கெதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களையும், யுத்தக்குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தன.
வெளிநாடுகளில் வாழும் புலம் பெயர் புலிகள் அமைப்பினர் இதற்கான கடும் அழுத்தங்களை பிரயோகித்தனர்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் சர்வதேசத்துடன் நட்புறவு இருக்கவில்லை. அனைவருடனும் முரண்பட்ட நிலைமையே காணப்பட்டது. உலக நாடுகள் எமக்கு ஆதரவு வழங்கவில்லை. இவ்வாறானதோர் சூழ்நிலையில் எமக்கெதிராக ஐ.நா.வில் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன.
உலகம், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு என்பன எமது நாட்டுப் பிரச்சினை தொடர்பில் இரண்டாகப் பிளவுபட்ட நிலைப்பாட்டிலேயே காணப்பட்டன.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் பொருளாதார தடை விதிக்கப்படும் ஆபத்தும் காணப்பட்டது. அதற்கு முன் ஏற்பாடாக ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை நீக்கம், ஐரோப்பியன் ஒன்றியத்தின் மீன் இறக்குமதி தடை போன்றன விதிக்கப்பட்டன.
இவ்வாறானதோர் சூழ்நிலையிலேயே நான் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கினேன். இதன்போது எதிர்தரப்பினர் நான் யுத்தத்தை முடித்த தலைவர்களையும், படையினரையும், மின்சாரக் கதிரையில் அமர வைக்கப்போகின்றேன் என குற்றம் சாட்டினார்கள்.
ஆனால் மக்கள் இந்த குற்றச்சாட்டை நிராகரித்து என்னை ஜனாதிபதியாக்கினார்கள் .
அதன்பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆட்சியமைத்து இந்த நிலைமையை மாற்றுவதற்கான பயணத்தை ஆரம்பித்தோம். அதன் முதற்படியாக 19 ஆவது திருத்தத்தை நிறைவேற்றி எனக்குள்ள நிறைவேற்று அதிகாரங்கள் சிலவற்றை குறைத்தேன். சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தேன். நாட்டில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும பாதுகாத்தோம்.
காணாமல் போதல், கொலைகள், மோதல்கள், தாக்குதல்கள் இல்லாத ஜனாநாயத்துடனான நல்லாட்சியை உருவாக்கினோம்.
ஜனவரி 8 ஆம் திகதி இந்த புரட்சியினை உருவாக்கினோம். அதன்பின்னர் ஆகஸ்ட் 17 ஆம் திகதியின் பின்னர் தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தி அரசியல் இணக்கப்பாட்டை நிறுவினோம்.
இதன்மூலம் சர்வதேச ஆதரவு கிடைத்தது. எமது நடவடிக்கையை சர்வதேசம் வரவேற்றது.
மின்சாரக் கதிரை என்ற பேச்சுக்கே இனி நாட்டில் இடமில்லை. இந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காவிட்டால் பயங்கரமான நிலைமைகளை சந்திக்க நேர்ந்திருக்கும்.
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்கள் உட்பட அனைவருக்கும் நட்டஈடுவழங்கப்பட வேண்டும். தருஷ்மண் அறிக்கை, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை, உதாலாகம ,பரணகம, ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து உள்ளக விசாரணைகள் மேற்கொள்வோம்.
ஜெனிவா பிரேரணை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் போது எமது மக்கள் நெருக்கடிகளை சந்திப்பார்களானால் அது தொடர்பில் மக்களுக்கு சார்பான நிலைமைகளை முன்னெடுப்போம். நியாயமான , நீதியான தீர்வை பெற்றுக் கொடுப்போம். நாட்டு மக்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் எவ்விதமான பிரச்சினையுமின்றி சுமூகமான நிலைமைய உருவாக்குவோம் என்றார்.