Breaking News

உள்ளக விசாரணைக்காக சட்டத்தை திருத்துவதா? இல்லையா? என ஆராய்வோம்

இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் தொடர்பான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்னவென்பது அந்த தீர்மானத்தை முழுமையாக ஆராய்ந்த பின்னரே அறிவிக்கப்படும் என அந்த கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் இந்த ஊடக சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில்,

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானம் தொடர்பாக ஆராயவென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா உள்ளிட்ட 12 பேர் அடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை தொடர்பாக தற்போது ஆராய்ந்து வருவதுடன் அது தொடர்பான பேரவையின் இறுதித் தீர்மான முடிவுகள் வரும் வரை காத்திருக்கின்றது.

அந்த முடிவுகள் கிடைத்த பின்னரே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதனை அறிவிக்க முடியும். நாம் தற்போது 261 பக்கங்கள் கொண்ட அறிக்கையொன்றைத் தயாரித்துள்ளோம். அதனைக் கட்சியின் சகல எம்.பி.க்களிடமும் சமர்ப்பித்து அவர்களின் யோசனையைப் பெற்று அதன்பின்னர் மேற்படி குழு தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கும். எவ்வாறாயினும் தற்போது சர்வதேச விசாரணை என்ற விடயத்தை இல்லாது செய்து தேசிய பொறிமுறையென்ற விடயத்துடன் செல்லும் வகையில் அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளது.

ஆனால் சில விடயங்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் பொருட்டு சர்வதேச நீதிபதிகள் இங்கு வரலாம். அப்படி வருவதென்றால் இலங்கைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். ஆனால் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளாது முன்னெடுக்கக் கூடிய சில வேலைத் திட்டங்களும் உண்டு. அதனை முன்னெடுப்பதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது.

ஆனால் சர்வதேச நீதிபதிகள் மற்றும் சட்ட வல்லுனர்கள் இங்கு வந்து விசாரணை நடத்துவதென்றால் சட்டத் திருத்தம் அவசியமாகும். இதேவேளை மனித உரிமைகள் பேரவை அறிக்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது தொடர்பாகக் கூறப்பட்டுள்ளது.

இதன்படி அரசாங்கம் அதில் திருத்தங்களை மேற்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளது. அப்படித் திருத்தங்களை மேற்கொள்ளும்போது சர்வதேச ரீதியில் அந்தச் சட்டம் எவ்வாறு செயற்படுத்தப்பட்டுள்ளதென ஆராய்ந்து அதற்கு ஏற்றால் போல் அந்தத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டுமென்றே கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.