இந்தியாவை மீறி அமெரிக்கா இங்கு எதையும் செய்யாது-ராஜித
இந்து சமுத்திர விவகாரங்களில் இந்தியாவின் ஆலோசனை இல்லாமல் எந்தவொரு தீர்மானத்தையும் அமெரிக்கா
கொண்டு வராது. அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றாகவே இராஜதந்திரங்களை வகுக்கின்றன என்று சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அமெரிக்காவின் முதலாவது யோசனை காரம் கூடியதாகவே இருந்தது. மனித உரிமை மீறல் தொடர்பில் 48 பேர் பட்டியல் அந்த யோசனையில் இருந்தது. எனினும் புதிய அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளினால் அதனை முழுமையாக மாற்றியுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமாதானத்திற்கான மக்கள் இயக்கம் கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எவராலும் வீழ்த்தவே முடியாது என்று கருதப்பட்ட இராஜதந்திரத்தை நாம் தோற்கடித்தோம்.அதேபோன்று போரின் முதற்கட்டத்தை வெற்றிக்கொண்டு ஆகஸ்ட 17 ஆம் திகதி இரண்டாம் கட்டத்தையும் வெற்றிக்கொண்டோம். மேலும் தற்போது சர்வதேசத்தை வெற்றிக்கொண்டுள்ளோம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேசத்தை கைக்குள் போடுவதாக கூறி சீனாவை மாத்திரமே அரவணைத்து கொண்டு செயற்பட்டார். இலங்கை உற்பத்திகள் அதிகளவில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளுக்குமே ஏற்றுமதி செய்யப்டுகின்றன.
ஆனால் சீனாவிற்கு இலங்கை உற்பத்திகள் ஏழு சதவீதமே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனாலும் தற்போது சீனா தனது பொருளாதார கொள்கையை மறுசீரமைத்துள்ளது. அதனால் வெளிநாட்டு உற்பத்திகளுக்கு கட்டுப்பாடு விதிக்க போகின்றது.
எனவே மஹிந்தவின் மோசமான பொருளாதார கொள்கைகளிலிருந்து மக்களை பாதுகாத்துள்ளோம்.
இந்தியாவை பகைத்து கொண்டே முன்னைய ஆட்சி செயற்பட்டது. மனித உரிமை விவகாரத்தில் இந்தியாவுடன் அமெரிக்காவுடனும் மிகவும் ஆழமான உறவினை மேற்கொண்டோம்.
இந்து சமுத்திர விவகாரங்களில் இந்தியாவின் ஆலோசனை இல்லாமல் எந்தவொரு தீர்மானத்தையும் அமெரிக்கா கொண்டு வராது.
அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றாக இராஜதந்திரங்களை வகுகின்றன .
இதேவேளை அமெரிக்காவின் முதலாவது யோசனை காரம் கூடியதாகவே இருந்தது. மனித உரிமை மீறல் தொடர்பில் 48 பேர் பட்டியல் அந்த யோசனையில் இருந்தது. எனினும் புதிய அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளினால் அதனை முழுமையாக மாற்றியுள்ளோம் என்று கூறினார்.