Breaking News

பாலியல் இலஞ்சம் கோரிய யாழ்.பல்கலை இசைத்துறை முக்கியஸ்தரின் பதவி பறிபோனது!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவிகளை பாலியல் துஸ்பிரயோக நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் உட்படுத்திவந்ததாக குற்றம்சாட்டப்பட்டுவந்த இசைத்துறையின் முக்கியஸ்தர் ஒருவர் தற்காலிக பணி இடைநிறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக நம்பகரமாக தெரியவருகிறது, 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்.பல்கலைக்கழகத்தின் இசைத்துறை முக்கியஸ்தரான குறித்த விரிவுரையாளர் மாணவிகளை தனது பாலியல் இச்சைக்கு பயன்படுத்துவதற்காக பரீட்சை முடிவுகளில் கைவைப்பதான தொடர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. இது குறித்து மாணவிகள் துணிந்து சாட்சியமளிக்க தயங்கிய நிலையில் அண்மையில் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் தனக்கு நேர்ந்த அநீதி தொடர்பில் எழுத்துமூலமான குற்றச்சாட்டு ஒன்றினை யாழ்.பல்கலைக்கழகத்தின் உயர் பீடத்தின் கவனத்திற்கு கொண்டுவந்திருக்கிறார்.

இதனை அடுத்து பல்கலைக்கழக உயர்மட்டக்குழு ஒன்று தலைமையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. விசாரணையின் அடிப்படையில் குறித்த விரிவுரையாளரை மூன்று மாத காலத்துக்கு இடைநிறுத்துவதாக பல்கலைக்கழக உயர்மட்டக்குழு தீர்மானித்திருக்கிறது. இந்தக் காலப்பகுதி அவருக்கான வேதனமும் வழங்கப்படாது என்றும் தெரியவருகிறது. 

இதனிடையே அவர் வகித்துவந்த உயர் பதவியும் பறிக்கப்பட்டிருப்பதாகவும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை மாணவி என நினைத்து மாணவர் ஒருவருடன் குறித்த விரிவுரையாளர் இரவுப் பொழுதில் தொலைபேசியில் உரையாடிய கீழ்த்தரமான ஒலி ஆதாரம் ஒன்றும் ஊடகங்களின் கைகளில் சிக்கியிருப்பதாகவும் தெரியவருகிறது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் மேலும் பல ஆதாரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுவதோடு குறித்த ஓடியோ உரையாடல் ஒன்றும் எமது செய்திப்பீடத்திற்கு கிடைத்துள்ளது.